Thursday 20 March 2014

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை! 
 
குஜராத் கலவரங்களைத் தூண்டி விட்டதே நரேந்திர மோடிதான் என்று ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று காங் கிரஸும், மத்திய அரசும், அவர்களு டைய ஆதரவில் செயல்படுகிறவர்களும் செய்து வருகிற முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. கலவரங்களுக்கு மோடி பொறுப்பு என்று வழக்காட ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட விசேஷ விசாரணைக்குழு முடிவு சொல்லியும், அந்த முடிவை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தும், இவர்கள் விடுவதாக இல்லை. ஒரு பெண்ணை குஜராத் போலீஸ் மூலம் வேவு பார்த்ததாக ஒரு குற்றம் சுமத்தினார்கள்; அதுவும் எடுபடவில்லை என்பதால் இப்போது அந்தப் புகாரை விசாரிக்க, ஒரு விசரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. விசாரணை முடிவு மூன்று மாதத்தில் வர வேண்டும் என்பதும் அமைச்சரவையின் முடிவு. அதாவது தேர்தலுக்குள், தேர்தல் பிரச்சாரத்திற்காக, நரேந்திர மோடியை ஏதாவது ஒரு குற்றத்தில் சிக்க வைத்து காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காக, மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இது. கட்சிக்காக, ஆட்சி துஷ்பிரயோகம் என்பதன் உச்சகட்டம் இது.(துக்ளக் 8.1.2014)
மேற்கண்ட வாசகங்கள் துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி  எச்சரிக்கை என்று தலையங்கத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! என்று எச்சரிக்கவேண்டியது நாம் தான்.
திருடனே திருடன், திருடன்! என்று குரல் கொடுத்து ஓடித் தப்புவது போன்றது சோ ராமசாமி போன்றவர்களின் தந்திரப் புத்தியாகும்.
உலக வரலாற்றில் மனிதப் படு கொலையாளர்கள் வரிசையில் இட்லர் தொடங்கி மோடி வரை என்று ஒரு நீண்ட சரிதம் எழுதப்பட வேண்டும்.
காவல்துறை அதிகாரிகளை அழைத்து மூன்று நாள்கள் கெடு கொடுத்து அதற்குள் சிறுபான்மை முசுலிம்களை எந்த அளவு படுகொலை செய்ய முடியுமோ, செய்து முடியுங்கள் என்று உத்தரவிட்டவர் அனேகமாக நர வேட்டை நரேந்திர மோடியாகத் தானி ருக்க முடியும்.
நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லாததாலேயே சவர்க்கார் காந்தியார் கொலையில் சம்பந்தப்படாதவர் ஆக மாட்டார். நீதிமன்றத்தில் தண்டனை வழங்காததாலேயே சங்கராச்சாரியார் குற்றமற்றவர் ஆக மாட்டார்.
நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்காததாலேயே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் பரிசுத்த மனிதர்களாகி விட மாட்டார்கள். மோடியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான்.

இட்லர் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர்தான் பாலங்களையும், சாலைகளையும் போட் டவன்தான். அதற்காக சொந்த நாட்டு யூதர்களை அவன் கொன்று குவித்த கொடுமையின் ரத்த வாடை வரலாற்றை விட்டு நீங்கி விடுமா?

திறமையான நிருவாகி, குஜராத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தூக்கி நிறுத்திய திறமைசாலி என்று காற்றடித்து உப்ப வைத்து வானில் பலூனாகப் பறக்கவிடுவதெல்லாம் மோடியின் மூர்க்கத்தனமான மத வெறியை மூடி மறைக்கத்தான்; மாநில முதல் அமைச்சராக இருந்தபோதே இப்படி என்றால் பிரதமர் ஆனால் அவ் வளவுதான் - நாடு தாங்கவே தாங்காது.
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
விசாரணை அமைப்புகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
2002-இல் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்ற மும் கடுமையாக கண்டித்துள்ளன.
கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித் ததுடன் கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது.
2004-ல் உச்சநீதிமன்றத்தில் நீதி யரசர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமிராஜு ஆகியோர் அளித்த தீர்ப் பில் ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு மோடியை ஒப்பிட்டார்கள்.
கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அப்படி சொன்னது மட்டுமல்லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக் கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.
அதுமாத்திரமல்ல குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்து கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டி ருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சவ்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனை யிலிருந்து தப்பவைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சிகளை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றியதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும்.
இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசார ணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.
கோத்ரா பிணங்களைக் காட்டி மதக் கலவரங்களை தூண்டினார்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியான 56 உடல்களை அரசு நடை முறை வழக்கத்திற்கு மாறாக குஜராத் தலைநகருக்கு வரவழைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களின் உணர்ச் சிகளைத் தூண்டிவிட்டு பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமாக இருந்தார்.
அன்று இரவே காவல்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் இரண்டு நாட்களுக்கு கலவரங்கள் நடக்கும். அதை கண்டுகொள்ளாதீர்கள், தடுக்காதீர்கள் என பகிரங்கமாக கூறியதாக 2002-லேயே சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மினிட் நடைமுறை பின்பற்றப்படாதது மனித உரிமை அமைப்புகளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
தெகல்கா பத்திரிகை
வெளிப்படுத்திய உண்மைகள்!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் பல அதிர்ச் சியான உண்மைகள் வெளிப்பட்டன.
முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
கலவரம் நடந்த பகுதிகள் சிலவற்றிற்கு நேரடியாகச் சென்று குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளைக் கண்டித்த நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும் என தெரிவித் தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திர மாக உள்ளான்.
####
முதல்வர் மோடியின் வானொலிப் பேச்சு
அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர், நியாயம் கேட்க மாட்டோம் என்ற உறுதியை அளித்தால்தான் அமைதி திரும்பும்
- _ குஜராத் கலவரம் தொடங்கிய மூன்றாம் நாள் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் வானொலி உரையில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 8.10.2003)
####
எதிர்வினையாம்
2005 சனவரி 17ஆம் தேதியன்று கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான உமேஷ் சந்திரா பானர்ஜி ஆணையத் தின் இடைக்கால அறிக்கை வெளியிடப் பட்டது. அடுத்த இரு நாட்களில் தினேஷ் மோகன் ஏ.கே. ராய், சுனில்காலே, எஸ்.என் சக்ரவர்த்தி முதலிய பேரா சிரியர்கள் மற்றும் பொறியாளர்களின் கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட சதி என்கிற மோடி கும்பலின் பொய்களுக்கு இவ்விரு அறிக்கைகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பின் இயற்கையான எதிர்வினையே குஜராத் பயங்கரங்கள் என்னும் அவர்களின் நியாயங்கள் அடிபட்டுப் போயின.
####
படுகொலையே நியாயப்படுத்திய கொடுமை
சங்பரிவார்க் கும்பல் பந்த் நடத்தினர். நரோடா -_ பாட்டியா என்னும் இடத்தில் 58 பெண்களையும் பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவித்தனர். அது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடங்கிய வாசகம் என்ன தெரியுமா?
கோத்ரா வன்முறை நிகழ்வுக்கு எதிர்விளைவாக இந்தச் சம்பவம் நடந்தது என்று குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டதன் மூலம் அந்தப் படுகொலைக்கு மோடி அரசாங்கத்தின் காவல்துறையே நியாயம் கற்பித்து விட்டது.
வழக்கு வாபஸ்!
குஜராத் மதக் கலவரத்தின் போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் மோடி அரசால் விலக் கிக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ருமாபால், சின்கா மற்றும் கபாடியா அடங்கிய அமர்வு அத்தனை வழக்குகள் மீதும் விசாரணை நடத்து மாறு ஆணை பிறப்பித்தது. (17.8.2004)
####
பொடா சட்டம்
குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல _- பயங்கரவாதி களைத் தயார் செய்யும் சட்டம்(Production of Terrorist Act) என்று சொன்னார் குஜராத் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் டாக்டர் முகில் சின்ஹா.
குஜராத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 287 அதில் முஸ்லிம்கள் 286, சீக்கியர் ஒருவர்; மகாராட்டிராவில் மனித உரிமை ஆர்வலர் மேமோன் குஜராத் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது இதைச் சுட்டிக் காட்டி நேருக்கு நேரே கேட்டார். பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற தனிப் பிரிவு ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.
####
ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டனவாம்!
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டு விட்டதாக மோடி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. வகில் என்பவர் நீதிபதி நானாவதி விசாரணை ஆணையத்தின் முன் பகிரங்கமாக அறிவித்தார்.
கோத்ரா சம்பவம் நடந்த அன்று இரவு காவல்துறையின் உயர் அதி காரிகளோடு முதல் அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அதில் தலையிடாதீர்கள்! என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உளவுத்துறை உதவி ஆணையர் சஞ்சீவ்பட் அய்.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே அந்த அதிகாரி கலந்து கொள்ளவில்லை என்றது மோடி அரசு. அப்படியானால் தகவல் அறியும் சட்டத்தின்படி அந்தக் கூட்டத்தில் நடவடிக்கை ஆவணங்களை அளிக்குமாறு கோரினார்; இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என்று அப்பொழுது சொன்னவர்களே, பிற்காலத்தில் அந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.
####
போலி என் கவுண்டர்
2004 ஜூன் 15ஆம் தேதியன்று இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் அம்ஜத்அலி ராணா மற்றும் ஜீஷன் ஹோஹாய் ஆகிய நான்கு பேரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த விவகாரத்தில் முறையான விசார ணையை குஜராத் காவல்துறை செய்யும் என்பதை நம்ப முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்யுமாறு மத்தியப் புலனாய்வுக் குழுவை (சி.பி.அய்.) உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷ்குமாரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. படுகொலை செய்யப்பட்ட இந்த நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -_ இ-தொய்பா அமைப்புக்காக வேலை செய்தவர்கள் என்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தனர். குஜராத் உயர்நீதிமன்றம் ஆணைப்படி புலனாய்வு செய்த சி.பி.அய். நால்வரும் கொல்லப்பட்டது போலி என் கவுண்டர்தான் என்று உறுதி செய்தது.  இந்தப் போலி என்கவுண்டரில்  கொலை செய்த காவல்துறை அதிகாரி வன்சாரா அந்தப் போலி என்கவுண்டர் முதல் அமைச்சர் மோடி உத்தரவுப்படியேதான் நடந்தது என்று சிறையிலிருந்தபடியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
####
மத நல்லிணக்கத்தைக் காப்பாற்ற உண்ணாவிரதமாம்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி (சத்பாவனா) மோடி உண்ணாவிரதம் இருந்தது ஆச்சரியமே! மூன்று நாள் உண்ணாவிரதம் ஒன்றை குஜராத் பல் கலைக் கழக வளாகத்தில் குளிரூட்டப் பட்ட மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்.
மதநல்லிணக்கம் அல்லவா! - சில முஸ் லீம்களும் வந்திருந்தனர். மதக் குரு (இமாம்) ஒருவர் மோடியைக் கட்டித் தழுவி தான் அணிந்திருந்த குல்லாயை அணியுமாறு கொடுத்ததை அணிய மறுத்தார் மோடி (இதுதான் அவரின் மத நல்லிணக்கம்) அதனை சிவசேனா சுட்டிப் பாராட்டியது.
(தினமலர் 22.9.2011 பக்கம் 3)
எப்பொழுதும் மோடி அப்படிதான்!
குஜராத் படுகொலை நடைபெறு வதற்குப் பத்தாண்டுகளுக்குமுன் ஒரு நிகழ்வு; பிரபல சமூகவியல் சிந்தனை யாளர் -_ எழுத்தாளர் ஆஷிஸ்நந்தி அன்றைய ஆர்.எஸ்.எஸின் பிரசாரகராக விருந்த நரேந்திரமோடியைப் பேட்டி கண்டவர்; அதுபற்றி ஆஷிஸ் நந்தி என்ன கூறினார்?
அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு ஃபாசிஸ்டைத்தான் நான் சந்தித்தேன் ஃபாசிஸ்ட்டு என்று அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தையல்ல; எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக அவர் விளங்கினார் சர்வாதிகாரத்தின் பரிபூரணமான மனநிலை கொண்டவராக அவர் விளங்கினார்; ஒரு கொலை யாளியை சில வேளைகளில் ஒருகூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று ஆஷிஷ் நந்தி குறிப்பிட்டார்.
ஊழல்! ஊழல்!!
குஜராத்தில் ஊழலே கிடையாது என்பது பொய்ப் பிரச்சாரம் அது உண்மையென்றால் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் உரிமை படைத்த லோக் அயுக்தா நீதிமன்றத்திற்கு எட்டு ஆண்டு காலம் நீதிபதி நியமிக்கப்படாதது  ஏன்?  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் இதற்கு நியமிக்கப்பட வேண்டும். பதவியில் இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் லோக் அயுக் தாவுக்கு ஒரு நீதிபதியைப் பரிந்துரைப் பார். அதனை முதல் அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் பரிசீலித்து, ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். எஸ்.டி. தவே என்ற நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரைத்தார் ஆனால், அதனை முதல்வர் மோடி ஏற்றுக் கொள்ளவில்லை.  வோரா என்னும் நீதிபதி  அப்பதவிக்கு வரவேண்டும் என்பது மோடியின் விருப்பம். ஏன் அவர்மீது அவ்வளவு அக்கறை? 2002இல் 14 பேர்களை உயிரோடு பெஸ்டு பேக்கரியில் வைத்து எரித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அத்தனைப் பேரையும் குற்ற மற்றவர்கள் என்று விடுதலை செய்தவர்தான் அந்த வோரா. மோடி ஆட்சியில் உள்துறை அமைச் சராகவிருந்த ஹிரேன் பாண்டியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மோடிக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத் தவரும் இந்த வோராதான்.
####
அதற்குப்பின் வேறு ஒரு புதிய நீதிபதியைப் பரிந்துரைக்குமாறு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை (மு. கோபாத்தியாயா)க் கோருகிறார்; ஆளுந ரால் ஆர்.ஏ. மேத்தா என்ற நீதிபதி பரிந்துரைக்கப்படுகிறார். அதனையும் ஏற்க மறுக்கிறார் முதல்வர் மோடி. மீண்டும் அந்த வோராவையே நியமிக்குமாறு ஆளுநருக்குக் கடிதம் எழுதினார் மோடி. மேத்தாவை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும் இசைவு தந்த நிலையில் ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி ஆர்.ஏ. மோத் தாவையே லோக் அயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தார். இதற்காகத்தான் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட் டனர் என்பதை மறந்து விடக் கூடாது.
####
நோபெல் விஞ்ஞானி சந்திக்க மறுப்பு! குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கி ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.
2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்ப தால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!
இப்படிப்பட்ட கொடூர மனிதனான நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டுமாம் - இவருக்காகத்தான் சோ வகையறாக்கள் முட்டுக் கொடுக்கிறார்கள் - எச்சரிக்கை!
----------------------------------------மின்சாரம்  அவர்கள் 4-01-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

No comments:

Post a Comment