Thursday 20 March 2014

மோடியின் கபடம்! (2)


மோடியின் கபடம்! (2)
நாய்க்குட்டி காரில்  அடிபட்டதையும்  குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் கொல்லப்பட்டதையும், பெண்கள் சூறையாடப் பட்டதையும் சமப்படுத்திப் பேசிய நிலையில், டில்லி மாநில பி.ஜே.பி. துணைத் தலைவர் அமீர்ராசா உசேன் என்பவர் பதவியிலிருந்து மட்டுமல்ல; கட்சியிலிருந்தும் விலகினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
 
 நரேந்திர மோடியின் இந்தக் கருத்து இழிவானது; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர்களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பிஜேபியின் தலைவர்; என்னுடைய தலைவர் இல்லை என்று கூறினாரே!
 
 பதவி விலகல் குறித்து மேலும் அவர் கூறினார். என்னைப் போல் பல சிறுபான்மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பேயி, அத்வானியால் வழங்க முடிந்தது.  மோடியை முன்னிலைபடுத்துவதன் மூலம் எங்களுக்கிருந்த மாற்று வழியை பி.ஜே.பி. அடைத்துவிட்டது. எல்.கே. அத்வானியோ, சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். எனவே கட்சியிலிருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது என்று எழுதினாரே.
 
 (வாஜ்பேயியாக இருந்தாலும், அத்வானியாக இருந் தாலும் அடிப்படை கொள்கை ஒன்றுதான்)
 
 இதுதான் பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரின் உண்மையான உள்ளக் குமுறலாக இருக்க முடியும். குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்து இருக் கிறார்கள் என்று சோ போன்றவர்கள் குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்கி எழுதுவது முஸ்லீம்கள் மீதான தாக்குதலை வேறு சொற்களில் நியாயப்படுத்துவதாகும்.
 
 குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில்  பிஜேபி சார்பில் ஒரே ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
 
 மோடி சொன்ன உதாரணம்கூட அடிப்படையில் தவறானது. காரில் நாய்க்குட்டி அடிபட்டதுகூட விபத்து - தற்செயலானது.
 
 ஆனால், குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது - திட்டவட்ட மானதாகும்.
 
 கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு - பலியானவர்களை சம்பந்தப்பட்டவர்களின் ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுத்த நிலையில், அதனை மாற்றி அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டார் என்றால், அதன் பொருள் என்ன? பொது மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வெறியாகி, விபரீதமாக உருமாற வேண்டும் என்ற படுநாசமான கோரப்புத்தி தானே!

குஜராத் கலவரத்தில் பொடா சட்டத்தின் கீழ் நரேந்திர மோடி அரசால் சிறையில் தள்ளப்பட்ட 287 பேர்களுள் 286 பேர்கள் சிறுபான்மையினரான முசுலிம் கள், ஒருவர் சீக்கியர் - ஒருவர்கூட இந்து கிடையாது.
 
 குஜராத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப் பட்டபோது விவரிக்க வார்த்தையே இல்லாத அளவுக்கு வருத்தப்பட்டதாக இப்பொழுது பசப்புகிறாரே - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களைத்தானே பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்? பாதிப்புக்குக் காரணமான கொலை வெறியர்களை - பெரும்பான்மை சமுதாயத் தினர்களுள் ஒருவரைக்கூட பொடாவின் கீழ் கைது செய்யவில்லையே, ஏன்? இதற்கு முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
 
 கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளை அழைத்து, மூன்று நாள் கெடு கொடுத்து, அதற்குள் அதிகபட்சமாக எவ்வளவு முஸ்லிம் மக்களைத் தீர்த்துக் கட்ட முடியுமோ அத்தனைப் பேர்களையும் வேட்டையாட அதிகாரம் கொடுத்தார் என்று காவல்துறை அதிகாரிகளே கூறியுள்ளார்களே!
காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சிறீகுமார், புலனாய் வுத்துறையின் உயரதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளார்களே!
 
 மோடி முதல் அமைச்சராகவிருந்த பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர் அதுவும் கோத்ரா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஹரீஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வுத் துறையிடம் கூறியவை பதிவு செய்யப்பட் டுள்ளன.
 
 கலவரத்தை நடத்த பி.ஜே.பி., வி.எச்.பி. தலைவர் களுக்கு மோடி மூன்று நாள் அவகாசம் கொடுத் திருக்கிறார். வி.எச்.பி. தலைவர்கள் என்னை சபர்கந்தா என்னும் இடத்தில் உள்ள குவாரிக்கு அழைத்துச் சென்று குண்டுகள் எப்படி தயாரிக்கப்பட்டன? எப்படி அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று நேரடியாக விளக்கினர். இந்துக்கள், முஸ்லீம்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்போது காவல்துறையினர் அமைதி யாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டனர். காவல்துறையினர் உதவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் இஹ்கான் ஜாஃப்ரியைக் கொன்றிருக்க முடியாது என்று கூறினாரே!
 
 இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருந்த முதல் அமைச்சர் மோடிதான் குஜராத் கலவரத்தால் அவருக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தையில்லை என்று இன்று கூறுகிறார் என்றால், இவர்களைவிட கொடியவர் களை மனிதம் என்ற ஒன்று அறவேயில்லாதவர்களை வரலாறு சந்திப்பது அரிதினும் அரிதே!
 
 இப்படிப்பட்ட ஒருவர் 120 கோடி இந்திய மக்களுக்குப் பிரதமரா? நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரம் அது!
  ----------------------------------”விடுதலை” தலையங்கம் 31-12-2013

No comments:

Post a Comment