Wednesday, 5 March 2014

வீசுவது மோடி அலை அல்ல - அவர் வீசும் வலை! வலை!! உஷார்! உஷார்!!


நரபலி நாயகர் மோடி அவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி அலைகிறார்; காலையில் இம்பால், பகலில் கவுகாத்தி - மாலையில் சென்னை (வண்டலூர்) - அடுத்தது கேரளா (கொச்சி) என்று அலையோ என்று அலைகிறார்! இதனைத்தான் பதவிப் பசி காரணமாக முன்பு பல வித்தைகளில் ஈடுபட்டு, பரிதாபத்திற்குரிய சிலர் மோடி அலை வீசுகிறது என்றும், மோடியின் பேச்சைப் பற்றி மோடியின் கட்சிக்காரர்களுக்கே தெரியாத உரை நயங்கள், பாஷ்யங் களை தங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டு, இரண்டொரு சீட்டுப் பேரத்தை  கூடுதலாக முடிக்க கருப்புச் சால்வையை இழுத்து விட்டுக் கொண்டு ஆலாபரணகளைச் செய்கின்றனர்!

மோடி வித்தை என்பது இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறி விடுகிறது! என்னா விநோதம் பாரு!

குஜராத்தில் பட்டேல்மீது திடீர் பக்தி; நேருவுக்குப் பதில் வல்லபாய் பட்டேல் அல்லவா பிரதமராகி இருக்க வேண்டும் என்கிறார்! (அந்தக் கால கட்டத்தில் அவர் ஒன்று கருவில் இருந்திருப்பார் அல்லது மழலையாக தவழ்ந்திருப்பார்) மேற்கு வங்கம் செல்கிறார்; அங்கே மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக பிரணாப் முகர்ஜி  அல்லவா பிரதமராகியிருக்க வேண்டும் என்று வித்தை காட்டுவார்!!

தமிழ்நாட்டுக்கு வருகிறார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழுக்கு அமு தென்று பேர் என்று எழுதிச் சொல்லிக் கொடுத்ததை நன்கு கூறி தமிழ்க் காதல் கொட்டுகிறார்!
கேரளாவுக்குப் போகிறார். அங்கே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை, பிற்படுத் தப்பட்ட மக்களை ஈர்க்க புது வித்தையை - சமூக நீதிக் குல்லாய் போட்டு சங்கநாதம் செய்கிறார்!

இனிவரும் 10 ஆண்டுகளுக்கு தலித் துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் தான் என்று கூறுகிறார் - ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு அழகாக இயக்குகிறது -  இந்த மோடி வித்தைக்காரரைப் பார்த்தீர்களா?

திருச்சியில் இரண்டு மாதங்களக்கு முன் வந்து முழங்கிய மோடி அப்போது கூறியது அதற்குள் நம் மக்களுக்கு மறந்து விட்டதா?

மொழி வழி மாநிலம் அப்படியெல் லாம் பிரித்து நாட்டை நாசமாக்கி விட் டார்கள்; தேசத்தைத் துண்டாடி விட்டனர் என்றார்!

தேவை தகுதி, திறமை தான் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பகிரங்க மாகவே பேசினார்.

ஆனால் கேரளத்திலோ ராகம் - வித்தை மாறிவிட்டது!

சமூகநீதிமீது திடீர்ப் பாச மழை பொழிந்து தள்ளியுள்ளார். அது சரி சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் மண்டல் குழு அறிக்கை பரிந்துரையின் ஒரு பகுதியான வேலை வாய்ப்பை அமுல்படுத்திய தற்காக மந்திரை (இராமன் கோயிலைக் காட்டி) 10 மாதங்கள்கூட நிறையாத வி.பி.சிங் ஆட்சியை ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் வடிவமான - மோடியின் கட்சியான - பா.ஜ.க. கவிழ்த்ததே - அதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பொற் காலத்தை - 10 ஆண்டை ஒதுக்கி நடத்து வதற்கு முன்னோடித் திட்டமா?

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்தானே!

மீடியாக்களை விலைக்கு வாங்கி - இணைய தளத்தை ஏவுகணையாக்கி, பிரச்சாரப் பெரு மழை யினால் வெற்றி பெற்று விடத் துடிக்கும் மோடி வித்தைகள் தேர்தலில் எடுபடுமா? எடுபடாது!

மதவாதத்தின் கோரப்பற்களில் சிக்கி பலியானவர்கள் நினைவும், குஜராத்தில் சிறுபான்மையினரால் சிந்தப்பட்ட பச்சை ரத்தமும் இன்னமும் காய்ந்து விட வில்லையே!

கசாப்புக் கடைக்காரர் ஒருவர் சொன் னார் ஆட்டை வெட்டியது கத்திதானே தவிர, நானல்ல என்று.  அதுபோல காந்தி கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறித் தப்பிக்கப் பார்க்கிறது உஷார்! மோடி அலை அல்ல - வலை - வலை வீசுகிறார்!

No comments:

Post a Comment