Saturday, 8 March 2014

மோடிக்கு 20 கேள்விகள் - - நரேன் ராஜகோபாலன்

மோடிக்கு என்னுடைய 20 கேள்விகள் ....................
 
 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால், அவரை காவியாளர்கள் நக்கலடிப்பதும், பரிகசிப்பதும் இயல்பு.

எனக்கு கட்சியோ, கொடியோ, அரசியல் அபிலாஷைகளோ, MP, MLA, Ward Counselor அளவுக்கு போட்டியிடும் கனவுகள் எதுவும் இப்போதைக்கு கிடையாது. I am just a stupid common man. இந்த நாட்டின் குடிமகனாய், ஒழுங்காய் வரிகட்டும் சராசரி மனிதனாய் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

பதில் சொல்வாரா மோடி ?

1) குஜராத் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறதென்பது உண்மையானால் ஏன் உங்களால் வெறுமனே 3 தொகுதிகள் மட்டுமே அதிகமாக 2013-இல் வென்று ஆட்சி அமைக்க முடிந்தது. (117 Vs. 120) நியாயமாய் பார்த்தால் 182 தொகுதிகளில் குறைந்த பட்சம் 150க்கும் மேற்பட்ட தொகுதிகள் நீங்கள் வென்றிருக்க வேண்டுமே ?

2) வெப்ரைண்ட் குஜராத் சப்மிட்டில் ஏன் திடீரென்று நீங்கள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையோ, முதலீடு ஒப்புதல்களையோ 2013-லிருந்து வெளியே சொல்ல மறுக்கிறீர்கள் ? அதற்கு முன்பு நடந்த இரண்டு சப்மிட்களின் conversion ratio ஏன் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது ?

3) நாட்டிலேயே முதன்மையான முதலீட்டு ஆதரவாக இருக்கும் மாநிலம் என்று பறைசாற்றும் நீங்கள், ஏன் ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில் ஆறாவது இடத்தில் இருக்கிறீர்கள் ?

4) இஸ்லாமியர்கள் என்னுடைய நண்பர்கள் என்று இன்றைக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கும் நீங்கள் ஏன் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு இஸ்லாமியரை கூட குஜராத் பாஜக சார்பாக போட்டியிடக் கூட தேர்ந்தெடுக்கவில்லை ? மாநகராட்சி தேர்தல்களில் இடம் தந்தோம் என்று சொல்லாதீர்கள். மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்கள் எப்படி நடக்குமென்று ஊருக்கேத் தெரியும்.

5) இஸ்லாமியர்களுக்கு ஆட்சியமைப்பில் ஆள தகுதியில்லை. அவர்கள் இன்னும் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்வதை கூட ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அரசாங்க பணிகளில் ஏன் மிகக் குறைந்த இஸ்லாமியர்களே குஜராத் அரசில் பணியாற்றுகிறார்கள் ?

6) இந்தியாவே பார்க்காத அளவிற்கு குஜராத் முன்னேறுகிறது என்று முன்வைக்கப்படுகின்ற மாநிலம் ஏன் இந்திய அளவில் மொத்த மாநில கொள்முதல் உற்பத்தியில் (GSDP) ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது ?

7) ஒரு வேளை, இந்த புள்ளிவிவரங்கள் எல்லாமே உங்களை நிராகரிக்க, காங்கிரஸ் அரசாலும், எதிர்ப்பாளர்களாலும் செய்யப்படுகிறது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். ஒரு மாநிலம் முன்னேறியிருந்தால், அதனுடைய தனிநபர் வருமானமும் அத்தோடு சேர்ந்து மேலெழுந்திருக்க வேண்டுமே. ஏன் குஜராத்திகளின் சராசரி தனி நபர் வருமானம், நீங்கள் பறை சாற்றும் அளவிற்கு உயரவில்லை ?

8) குஜராத்தின் கல்வி சூழல் பற்றி அர்விந்த் கேட்டிருக்கிறார். அதிலும் இரண்டு கேள்விகள் இருக்கிறது.

8a) ஏன் பள்ளி admission களில் நகரங்களிலும், கிராமங்களிலும் இஸ்லாமிய குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள் ?

8b) அப்படி குறைவாக இருக்கும் குழந்தைகளே கூட, ஏன் பத்தாவது தாண்டி குஜராத்தில் படிக்க மாட்டேன் என்கிறார்கள் ? உள்ளடக்கிய வளர்ச்சி என்று தானே நீங்கள் முன்வைக்கிறீர்கள். உள்ளடங்கிய வளர்ச்சியில் இவை அத்தனையும் வருமே. ஏன் இந்த தளர்ச்சி ?

9) நவ்ஸ்ரஜன் அறிக்கையின்படி (1600 கிராமங்கள்) பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித்துக்களின் நிலை கிராமங்களில் மிக மோசமாக இருக்கிறது. தீண்டாமை சர்வ சாதாரணமாகவும், ‘இரட்டை குவளை’ முறை பரவலாகவும் இருந்து வருகிறது. ஐந்தில் ஒரு தலித் குழந்தை போலியோ சொட்டு மருந்து தரப்படாமல் தீண்டாமை கொடுமையால் நிராகரிக்கப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்லுகிறது. meritocracy முதல்வரான உங்கள் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்த அவலம் ஏன் இன்னும் தொடர்கிறது ?

10) 2002-க்கு பின் மதக்கலவரமே நடக்கவில்லை என்று நீங்களும், உங்களுடைய ஆதரவாளர்களும் மார் தட்டுகிறார்கள். (2006 வதோதரா கலவரங்களை ஒரு வாதத்துக்கு கணக்கிலெடுக்காமல் போனாலுமே கூட..) சமத்துவமான பயமில்லாத ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் ghettoisation விரைவாக கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்திருக்கிறது ? ஏன் உங்கள் அரசு அகமாதபாத், பரோடா, வதோதரா சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை சென்சிடிவ் இடங்களாக கணித்து அங்கே இந்து முஸ்லீமுக்கோ, முஸ்லீம் இந்துவுக்கோ வீடுகளை விற்கமுடியாத சூழலை உருவாக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறது ?

11) Less Government. More Governance என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் கிட்டத்திட்ட பத்தாண்டு காலமாக லோக் ஆயுக்தாவை குஜராத்தில் உள்ளே நுழைய விடாமல் செய்தீர்கள் ?

12) 2002 கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்கள், காருக்கு அடியில் மாட்டி இறந்த நாய்கள் போன்றவர்கள் என்றாலுமே கூட, அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள். கே.பி. கில்லின் புத்தகம் உங்களை நியாயவாதியாக சித்தரிக்கிறது. ஒரு வாதத்துக்கு நீங்கள் நேர்மையானவர் என்று ஒத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில், நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமதி. மாயா கொத்தானியை உங்கள் அமைச்சரவையிலேயெ வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன ? உங்களுடைய நியாய தராசு, படுகொலைகளை முன்னின்று நடத்திய ஒரு அமைச்சருக்காக ஒரு பக்கம் ஏன் வளைந்தது ?

13) டாடா நேனோ வின் தொழிற்சாலையை ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் வங்காளத்திலிருந்து குஜராத்திற்கு இடம் மாற்றினீர்கள் என்று உங்களுடைய பெருமையை ஊரே மெச்சுகிறது. உங்கள் அரசு ஆவணங்களின் படி, சனானந்தில் 1100 ஏக்கர் நிலம் டாடா மோட்டார்ஸுக்கு சதுரமீட்டர் ரூ.900 என்கிற அளவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனுடைய சந்தை விலை ரூ.10000/சதுர மீட்டர். இதனால் குஜராத் அரசுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எல்லா தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. 2,000 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்டிற்கு 30,000 கோடி ரூபாயை இழப்பதற்கு பெயர் நிர்வாக சாதுர்யமா ?

13 A) ஒரு வேளை இந்த 30,000 கோடி ரூபாய் என்பது notional loss தான் revenue loss என்று நீங்கள் சமாளித்தால், இதே அளவுகோலில் அல்லவா 2ஜியின் யூக பேர notional இழப்பையும் பார்க்க வேண்டும். அது ஊழல் என்றால், இது என்ன ?

14) 2003-இல் திட்டமிடப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா நீர் வரத்து திட்டம் 2012 வரை முடியவேயில்லை. 2005-இல் முடிந்திருக்க வேண்டிய திட்டமிது. ஆட்சி மாற்றத்தால் முடிக்காமல் போனது என்று கதை விட முடியாது. மூன்று முறை நீங்கள் தான் ஆட்சி செய்திருக்கிறீர்கள். ரூ. 6,237 கோடி ரூபாய் திட்டத்தில் 500 கோடி ரூபாய்கள் வரை ஊழல் நடந்திருக்கிறது என்று பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி எழுதிய அறிக்கையே ஏன் நீங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யவிடவில்லை ?

15) 2002-இல் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்கலாம் என்று சொல்லியிருந்தது. 2004-இல் ஐ.மு.கூ அரசு வந்தவுடன் பாஜகவின் நிலை மாறியது. அன்றையிலிருந்து நீங்கள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பேசுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பொருளாதார பார்வையில் அன்னிய முதலீட்டினை ஆதரிப்போம் என்று சொல்கிறீர்கள். ஏன் இந்த பல்டியடித்தல் ? காங்கிரஸ் அரசு அனுமதித்தால் அது உள்நாட்டு பொருளாதாரத்தை சீரழிக்கும், நீங்கள் அனுமதித்தால் வளம் கொழிக்கும் என்பது என்ன லாஜிக் ?

16) திட்ட கமிஷன் அறிக்கை, சராசரி இந்தியர் கிராமத்தில் ரூ.33 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டு வெளியே இருக்கிறார் என்று முன் வைத்தப்போது அதை முழுமையாக நிராகரித்த கட்சி உங்களுடையது. உங்கள் அரசின் அறிக்கை சராசரி குஜராத்தி கிராமத்தில் ரூ 10.80 ஒரு நாளைக்கு சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு வெளியே இருக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறது. இது தான் நீங்கள் குஜராத்தில் வறுமையை புள்ளிவிவரத்தில் ஒழித்த முறையா ? இதை தான் வளர்ச்சி என்று முன்வைக்கிறீர்களா ?

17) உங்களுடைய வலதுகரமான அமித் ஷா ஒரு பெண்ணை போலிஸ் உதவியுடன் மாநிலங்கள் தாண்டி பின் தொடர்ந்திருக்கிறார். அந்த பெண்ணின் அப்பா தானே முன்வந்து உங்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்காக நீங்கள் செய்ததாகவும் சொல்கிறார். இதில் ஏதாவது நம்பும்படியாக இருக்கிறதா ? இது உதவியென்று வைத்துக் கொண்டால், இதை மாநில காவல்துறை அல்லவா கண்காணிக்க வேண்டும். ஏன் ஒரு வலதுகரம், உங்களுக்கு அப்டேட், போலிஸ் கமிஷ்னர் கெஞ்சல் என்று விரிகிறது ?

18) குஜராத் 2002 கலவரங்களை 72 மணி நேரத்தில் அடக்கி அமைதி காத்தேன் என்று போகிற இடங்களிலெல்லாம் பறை சாற்றுகிறீர்கள். அதற்கு பின்பு குஜராத்தில் மதகலவரங்களே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் உங்களுடைய ஆதரவாளர்கள். இவையிரண்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிப். 27, பிப் 28, மார்ச் 1, 2002-இல் மட்டும் தான் படுகொலைகள் நடந்திருக்கவேண்டும். அதற்கு பின் குஜராத்தில் பூரண அமைதி நிலவியிருக்க வேண்டும். 2002 ஆன்லைன் நாளிதழான ரீடிப்பில் வந்திருக்கின்ற செய்திகள்

Apr 16,2002: Three Killed, nine hurt in Ahmedabad violence
Apr 17, 2002: Four killed in fresh violence in Gujarat
Apr 22, 2002: Six killed in fresh violence in Ahmedabad
Apr 23, 2002: Toll in renewed violence rises to 29 - PTI
Apr 26, 2002: Two killed as violence rocks: Ahemadabad: PTI
Apr 27, 2002: 1 killed, 8 hurt in Baroda violence: PTI

இவற்றை எந்த கணக்கில் கொண்டு வருவது ? மதக்கலவரமா இல்லை வாய்க்கால் வரப்பு தகராறா ?

19) மதம் மற்றும் இறைநம்பிக்கை சார்புகள் என்பவை தனிநபர் சார்ந்தவை. அரசியல் சாசன ஆர்டிக்கிள் 25 இந்த சுதந்திரத்தை தனிநபர்களுக்கு வழங்குகிறது. ஆனால் குஜராத்தில் மட்டும் ஏன் Gujarat Freedom of Religion Act இதை தடை செய்கிறது. மதம் மாற வேண்டுமானால் எதற்காக அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் ?

20) ஒரு அப்பாவி தந்தை கேட்டதற்காக அவருடைய மகளை உங்களின் வலது கரமான அமித் ஷாவை வைத்து ‘கண்காணித்து’ அந்த குடும்பத்தின் மானத்தை காத்தீர்கள். ஆனால், ஏன் குஜராத் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிராக இருக்கின்றன. 2012-13 தகவல் சொல்வது: 49.22% வன்புணர்வுகள், 30% பாலியல் அத்துமீறல்கள், 21.83% குடும்ப வன்முறை, 74.49% வரதட்சணை இறப்புகள் மற்றும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 39% அதிகரித்து இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கு ஒத்து ஊதும் தகப்பன்களின் பெண்களை மட்டும் தான் கண்காணித்து காப்பீர்களா ? மற்ற பெண்கள் எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவை தான் நம்ப வேண்டுமா ?

கேள்விகள் இன்னும் வரும்....
 

No comments:

Post a Comment