Thursday, 20 March 2014

மோடியின் கபடம்! (3)

மோடியின் கபடம் (3) 
 

குஜராத் கலவரத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தம் தெரிவிக்கிறார் - அம்மாநில முதலமைச்சர் என்றால், அதனை யாரும் நம்பமாட்டார்கள்.
 
 அந்தக் கலவரம் நடந்த பின்னணியைக் கருத்தில் கொண்டால், அது முழுக்க முழுக்க முதலமைச்சர் மோடி என்ற மய்யப் புள்ளியிலிருந்து வெடித்துக் கிளம்பிய விபரீதம் ஆகும்.

சிறுபான்மையினரை வளைத்து வளைத்துக் கொன்றனர் - அதற்காக மலைவாழ் மக்களைக்கூடப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று குரல் கொடுத்தால் காவல்துறையினர் ஒதுங்கிக் கொள்ளவேண்டும்; சிறுபான்மையினரை உயிரோடு கொளுத்த காவல்துறையின் வாகனங்களில் இருந்துகூட பெட்ரோல் கொடுத்து உதவப்பட்டுள்ளது.

காவல்துறை ஜீப்பில்கூட சிறுபான்மையினர் கொண்டுவரப்பட்டு, சங் பரிவார்க் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் உலகில் எங்கும் கேள்விப்பட்டிருக்க முடியாத அவலம் ஆகும்.

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் முகாம்களில் சரணடைந்தனர். அந்த நேரத்தில், முதலமைச்சர் மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது அவரின் திருவாய் அவிழ்த்துக் கொட்டியது என்ன?

நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக் குப் பாடம் படித்துக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரா இல்லையா? இது மிகப்பெரிய- பிரச்சினையாக வெடித்தபோது முதல்வர் அவ்வாறு பேசவில்லை என்றனர்; ஆனால், அவர் அவ்வாறு பேசிய ஒலிநாடா வெளியில் வந்துவிட்டதே - மோடியின் முகம் வெளிறிப் போனதுதான் மிச்சம்.
குஜராத்தில் கலவரம் நடந்த ஒரு மாதம் கழித்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட்டார். நிவாரண நிதியாக ரூ.150 கோடி அறிவித்தார் பிரதமர். ஆனால், இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது - இனி நிதியோ, திட்டங்களோ தேவைப்படாது என்று மோடியின் உள்துறை அமைச்சர் கூறினாரா இல்லையா?
இன்னொரு தகவலும் முக்கியமானது. குஜராத்தில் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினாரே - முதலமைச்சர் நரேந்திர மோடி மீது - அதற்கு இதுவரை பதில் உண்டா?
காவல்துறை அதிகாரி சிறீகுமார் இந்தத் தகவலை நானாவதி ஆணையத்திடமே நேரில் சொன்னதுண்டே!

குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையாம் - பம்மாத்துப் பேசுகிறார்கள்.

பெரிய வீராதி வீரர் சூராதி சூரர் என்று பொதுக்கூட்ட மேடைகளில் தோள் தட்டுகிறாரே - 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறாரே, இதே மோடி சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலரான கரண்தாப்பருடன் பேட்டிக்கு அமர்ந்தபோது, குஜராத் கலவரம் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டபோது, தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் நான்கரை நிமிடங்களே தாக்குப்பிடித்து, தண்ணீர் குடித்து ஜகா வாங்கி வெளியேறினாரா இல்லையா?

உண்மையை மறைப்பதும், அப்பட்டமாகப் பொய்களைப் பேசுவதும், நீலிக் கண்ணீர் வடிப்பதும் எல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்குக் கைவந்த கலை. அதில் கைதேர்ந்தவர் இந்த மோடி. அதில் ஒன்றுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சம்பவம் வருணிக்க முடியாத துயரத்தை தனக்கு அளித்தது என்று பசப்புவது ஆகும். இந்தக் கபட நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் -  நம்பவே மாட்டார்கள்.
         ----------------------------”விடுதலை” தலையங்கம் --2-1-2014

No comments:

Post a Comment