Tuesday 5 November 2013

குஜராத் முதல் மாநிலமா?

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு, சங்பரிவார்களுக்கு அடிப்படை இல்லை என்பது தெரிந்து விட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. பெரும்பான்மையான இடங்களில் கட்டிய பணத்தைக் கூட (Deposit) திருப்பப் பெற முடியாத நிலை.

ஒவ்வொரு தேர்தலிலும்  திராவிட இயக்கக் கட்சிகளின் தோள்களில் ஓசியில் ஏறிக் கொண்டு பதவிப் பழம் ருசித்துக் கொண்டிருந்த இந்தக் கட்சியின் வண்டவாளம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெட்கக் கேடான முறையில் அம்பலமாகி விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மக்கள் கொடுத்த மரண அடியின் காரணமாகத்தான் மத்திய ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் எல்.கே. அத்வானி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு எப்படியும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியோடு பூணூலை முறுக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார் திருவாளர் சோ. ராமசாமி.

நரேந்திர மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும், செல்வி ஜெயலலிதாவைச் சந்திக்க வைப்பதுமான அரசியல் புரோக்கர் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு திரிகிறார்.

நரேந்திரமோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ் மாலைசூட்டி அர்ச்சனை செய்கிறார். இவ்வளவுக்கும் மோடி ஒன்றும் பார்ப்பனர் அல்லர்.

இருந்தும் ஏன் இந்த மோடிக்காக, மோடி மஸ்தான் வேலையில் இறங்குகிறது இந்தப் பூணூல்.

மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார். துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.

குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார்.

அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.

மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. வருமான அடிப்படையில் ஆறாவது இடம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடத்திலும், பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடத்திலும், கல்வியில் 14ஆவது இடத்திலும், மின் உபயோகத்தில் 10ஆம் இடத்திலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடத்திலும்,  பெண்கள் 15ஆம் இடத்திலும், சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடத்திலும், பெண்கள் 12ஆம் இடத்திலும் உள்ளனர்.

தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திலும், மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடத்திலும், சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடத்திலும், மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடத்திலும், மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடத்திலும் சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடத்திலும் இருக்கிறது.

ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடத்தில் இருப்பது ஏன்?

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம்.

சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறதீர்! கவனம்! கவனம்!!

No comments:

Post a Comment