Monday, 4 November 2013

படேலுக்கு இணையாக மோடியை முன்னிறுத்துவது மோசடியானது : மகாத்மா காந்தியின் பேரன் கடும் விமர்சனம்


புதுதில்லி, நவ. 4 - சர்தார் வல்லபாய் படேல் தற்போது உயிரோடு இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடி விஷம் கக்கி வருவதைப் பார்த்து மிகவும் வேதனையடைந்திருப்பார் என்று நரேந்திரமோடியின் மதவெறி குறித்து மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் நரேந்திரமோடியை ஒரு போதும் தனது தத்துவார்த்த வாரிசாக சர்தார் வல்லபாய் படேல் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டார் என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார். மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் இந்திய விடுதலைக்காக போராடியவருமான சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சியில் கரண் தாப்பர் நடத்தும் `டெவில்ஸ் அட்வகேட்’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்மோகன் காந்தி, வல்லபாய் படேலுக்கு இணையாக - அவரது வாரிசாக தன்னைத்தானே மோடி புகழ்ந்துகொள்வதும், அவரது பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் பொருத்தமற்றது; இது முற்றிலும் படேலை அவமரியாதை செய்வதும் ஆகும் என்று கூறினார்.

2002ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெருமளவில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது, மோடி தனது `ராஜதர்மத்தை’ நிறைவேற்றிவிட்டார் என்று கூறி அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை புகழ்ந்தார். அப்போது அவர்கள் படேலைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்று ராஜ்மோகன் காந்தி சாடினார். “ஒரு வேளை படேல் தற்போது உயிரோடு இருந்தால் மிகவும் வருத்தமடைந்திருப்பார். வேதனையும் கவலையும் அடைந்திருப்பார்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக மட்டுமல்ல; குஜராத்திலிருந்து வந்தவர் என்ற முறையிலும் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்“ என்றும் ராஜ்மோகன் காந்தி மேற்கண்ட நிகழ்ச்சியில் கூறினார்.“படேலுக்கு இணையாக மோடியை முன்வைப்பது முற்றிலும் மோசடியானது. வேண்டுமானால் ஒரே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் அப்படி ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சர்தார் வல்லபாய் படேல் என்பவர் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தவர்; மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் குடைகளின் கீழ் வளர்ந்தவர். மோடி என்பவர் ஆர்எஸ்எஸ் என்ற குடையின் கீழ் வளர்ந்தவர். இப்படி வேண்டுமானால் ஒப்பிட்டுப் பேசலாம்”என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.“மற்றொரு அம்சத்தையும் இருவருக்கும் இடையில் ஒப்பிடலாம். அது என்னவென்றால் படேல் என்ற தனி மனிதர் எப்போதுமே ஒரு குழுவை இயக்குபவராக, கூட்டு உணர்வை ஏற்படுத்துபவராக இருந்தார்; அவரது வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தன்னை முன்னிறுத்தியதில்லை; எப்போதுமே இதர மக்களுக்காகவே பாடுபட்டவர்.

மோடியைப் பொறுத்தவரை குழு உணர்வை ஏற்படுத்துகிறார்; அது முழுக்க முழுக்க தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைந்திருக்கிறது” என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.மோடியை கடுமையாக விமர்சித்த ராஜ்மோகன் காந்தி காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் என்ற இயக்கம் சர்தார் வல்லபாய் படேலை மறந்து வெகுகாலமாகிவிட்டது என்றும், அவர் மறைந்து 63 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில், அவரது பணிகளை சிறு அளவிற்கு கூட நினைவுகூர தயாராக இல்லாத கட்சியாக மாறிவிட்டது என்றும் கூறினார்.நேருவைத் தொடர்ந்து இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, தற்போது ராகுல்காந்தி என அவரது குடும்ப வாரிசுகள் அரசு அதிகாரத்தின் மூலமாக பலன்பெற்றார்கள்; ஆனால் படேலின் குடும்பத்திலிருந்து அப்படி யாரையும் சொல்ல முடியாது என்றும் ராஜ்மோகன் காந்தி கூறினார்.

நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவை மகாத்மா காந்தி முன்வைத்தபோது, நேருவை விட 16 ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும் வல்லபாய் படேல் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் காங்கிரஸ்காரராக இருப்பதையும் காந்தியின் சீடராக இருப்பதை மட்டுமே அவர் பெருமிதமாக நினைத்தார் எனக்குறிப்பிட்ட ராஜ்மோகன் காந்தி, நேருவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர் அவரே என்றும் ஏற்றுக்கொண்டவர் படேல் எனவும் குறிப்பிட்டார்.(பிடிஐ)

No comments:

Post a Comment