Thursday, 20 March 2014

மோடியின் கபடம்! (1)

மோடியின் கபடம்! (1) 
 
இந்தியாவையே குலுக்கிய இரு முக்கிய நிகழ்வுகள்
 
 1992 டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளன்று சங்பரி வார்க் கும்பல் - பிஜேபி தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை - இடித்துச் சுக்கு நூறாக்கிய கொடுமை;
இரண்டாவது 2002இல் மோடியின் தலைமையிலான குஜராத் பிஜேபி ஆட்சி சிறுபான்மை மக் களான முஸ்லீம்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர் களை (குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) அரசு பயங்கரவாதமாகக் கொன்று குவித்த கொடுமை!
 
 முதல் குற்றத்தைச் செய்த அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேர் தண்டிக்கப்படாமல் (லிபரான் ஆணை யத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) படாடோ பமாக பதவிச் சுகங்களையும் அனுபவித்த நிலையில் பல்லக்குச் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
 இரண்டாவது, ஈராயிரம் பேர்களுக்கு மேல் படு கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த நபர், இந்தியாவின் பிரதமருக்கான  வேட்பாளராகப் பவனி வருகிறார்.
 
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
 

 இதுவரை இந்தக் கொலைக் குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்காத, அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக் காத நீரோ மன்னன் (உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தை இது) கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பசப்பு வார்த்தைகளால் அந்தச் சம்பவம் வார்த்தை களால் விவரிக்க முடியாத வேதனையைத் தமக்கு ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
 
 இப்பொழுதுகூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்பும் கோரவில்லை.
 
 என்ன கூறுகிறார்? முதன் முதலாக  எனது துயரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறுகிறார்.
 
 அவரின் ஒப்புதல் வாக்கு மூலப்படி பார்த்தாலும்கூட ஒரு கொடிய நிகழ்வுக்கு ஒரு மனிதன்12 ஆண்டு களுக்குப் பிறகு முதன் முதலாக துயரத்தை வெளிப் படுத்துகிறார் என்றால் இது இயல்பானதுதானா? நம்பத் தகுந்தது தானா?
 
 12 வருடம் கழித்தா ஒரு மனிதனுக்கு வருத்தம் பீறிட்டுக் கிளம்பும்? பல ஊடகங்கள் மிகவும் வெளிப் படையாக கேட்டும்கூட, அந்த நேரத்தில் எல்லாம் விடாப் படியாக நின்றவர் - அத்தகு சந்தர்ப்பத்தில்கூட வருத்தம் தெரிவிக்க மனம் இல்லாதவர், இப்பொழுது துயரம், வருத்தம் என்று கூறுவதற்கு என்ன காரணம்?
 
 இந்தியாவில் டவுசர் போடாத கோலி விளையாடும் சின்னஞ்சிறு பொடியன்கூட படக்கென்று சொல்லி விடுவான்;  தேர்தலுக்காகப் பசப்பும் ஏமாற்றும் வார்த்தையென்று; வெகு தூரம் கூடப் போக வேண்டாம். 5 மாதங்களுக்கு முன்புகூட இவர் என்ன சொன்னார்? குஜராத் காந்தி நகரில் அதிகார பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள்மீது குற்றம் சாட்டியபோது விரக்தி அடைந்தீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:
 
 நான் ஏதாவது செய்திருந்தால்தான் நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடி விட்டதால் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதுபோல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல; நடந்த நடவடிக்கை களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படு கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகா ரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
 
 எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந் திருந்தாலும் சரி, ஒரு நாய்க் குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மன வேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான் (தினமணி 13.7.2013 பக்கம்1)
 
 அய்ந்து  மாதங்களுக்கு முன் இதே நரேந்திரமோடி கூறியவைதான் இவை.
இன்றைக்குத் தெரிவிக்கும் மோடியின் வருத்தம் எந்த ரகத்தைச் சேர்ந்தது? நாம் பயணிக்கும் காரில் நாய்க்குட்டி ஒன்று அடிபட்டு இறந்ததால் ஏற்படும் வருத்தத்துக்குச் சமமானது என்பதுதானே!
 
 கடந்த ஜூலையில் சொன்ன வருத்தத்துக்கும், இப்பொழுது மோடி சொல்லும் வருத்தத்திற்கும் அடர்த்தியில், ஆழத்தில், வேறுபாடு உண்டா என்பதை மோடிதான் விளக்க வேண்டும். (இதற்கு வக்காலத்துப் போட்டு பாஷ்யம் செய்ய ஒருக்கால் சோ. ராமசாமி அய்யர் வந்தாலும் வரக்கூடும்).
 
 மோடி - ஒரு மரண வியாபாரி என்று காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி சொன்னார். மோடியின்மீது விழுந்த கொலைக் கறைக்காக  தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும் என்ற பயம் உலுக்கும் நிலையில், அவர் வட்டாரத்தில் யாரோ சொன்ன யோசனையை ஏற்றுதான் 2002 நிகழ்வுக்கு வேதனைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
 
 மோடியைப் பற்றி அறிந்தவர் களுக்கு இது வெறும் உதட்டு அசைவு - உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல என்பது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் தெரியுமே!
                  
----------------- ----------------”விடுதலை” தலையங்கம் 30-12-2013

No comments:

Post a Comment