Thursday, 26 December 2013

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (1)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

ஆஷிஷ் நந்தி என்ற சமூக அறிவிய லாளர், 1990களின் தொடக்கத்தில் நரேந்திரமோடியைப்  பேட்டி கண்டவர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர் அதிர்ச்சியுடன் கூறிய சொற்கள்:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம் அடையாமல் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.கட்சியின் ஒரு சிறு பொறுப்புக்கு வருவதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தவர். அவரைப் பேட்டி காணும் பெருமை எனக்குக் கிடைத்தது. மோடியைப் பற்றி இவ்வாறு கூறுவதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. என்றாலும்,  எதேச்சாய திகார மனப்பான்மை கொண்ட மனிதர் களுக்கு உண்டான அளவுகோல்கள், கூறுகள், குணநலன்கள் எவை என மனநோய் மருத்துவர்களும், உளவியல் மருத்துவர்களும், மனஇயல் வல்லுநர் களும் பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு நிர்ணயித்துள்ள அம்சங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்று தான் என்னால் கூறமுடியும். தூய் மையான உயர்ஒழுக்கக் கொள்கை என்று தான் கருதியிருப்பதில் கொண்டிருக்கும் பிடிவாதம், உணர்ச்சி வயப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறுகிய கண்ணோட்டம்,  தனது கருத்தை நிலைநாட்டுவதில்  அள வுக்கு அதிகமாகக் காட்டும் தன் முனைப்பு, தனது உணர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் அத்தகைய உணர்வுகள் இருப்பதை ஏற்காமல் மறுப்பது,  அவற்றுடன் இணைந்த வன்முறை பற்றிய கற்பனைகள் - ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவையாக, தன்னைப் பற்றி பிறர் இழிவாகவும், தவறாகவும் பேசுகின்றனர் என்ற எண்ணத்தையும், ஒன்றைப் பற்றியே மிகத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் தனித் தன்மைப் பண்புகளையும் கொண்டு, அத்தகைய சமூக சூழ்நிலையில் வளர்ந்தவர் அவர் என்பது தெளிவாகத் தெரிகிறது..  நாட்டுத் துரோகி என்றும்,  தீவிரவாதியாக மாறக் கூடியவர் என்றும் ஒவ்வொரு முசுலீமுக்கும் வண்ணம் தீட்டி,  இந்தியாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் சதி செய்கிறது என்ற கோட்பாட்டை அவர் தீர்மானமான குரலில் விவரித்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பேரதிர்ச்சி அடைந்த நிலையில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நான், ஒரு ஃபாசிஸ்டுக்கான இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள ஒருவரை -  எதிர்காலத்தில் ஒரு பெரும் கூட்ட மான மக்கள் இனத்தையே அழிக்க வல்ல - தனது கொள்கைகளுக்காக எவரையும் கொல்லத் தயங்காத -  ஒருவரை இப்போதுதான் நான் சந்தித்திருக்கிறேன் என்று யாக்னிக் கிடம் கூறினேன். அண்மையில் பிரைம் டைம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  நாகரிகமற்ற ஒரு விலங்கு என்று நரேந்திர மோடியைப் பற்றி மற்றொரு சமூக அறிவியலாளர் சிவ. விஸ்வநாதன் கூறியிருந்தார்.

குஜராத்தைப் பற்றி பத்தாண்டு காலம் நான் ஆய்வு நடத்தி யிருப்பதால், அவரை மிருகம் என்று நான் கூறியதைப் பற்றி நான் நிச்சயமாக அறிந்துள் ளேன் என்பதை உறுதிப்படுத்து கிறேன்.  மோடியின் உடல் அசை வுகள் அவரது அகம்பாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்று அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி முன்பு கூறியிருக்கிறார். அண் மையில் (ராய்ட்டார் பேட்டி ஒன்றில் மோடி வக்கிரமாக கொலைவெறி எண்ணத்து டன் கூறிய குட்டே கா பச்சா என்று மோடி கூறிய பிறகு) மோடி மனநோய் மருத்துவர் ஒருவரைச் சென்று பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என்று திவாரி கூறினார். மோடியின் குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ள அவரது உடல் அசை வுகள்,  அவரது மனநிலை ஆகியவை பற்றிய இவர்களின் கருத்துகளை நாம் நம்பத்தேவையில்லை; கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது கடந்த கால நடத்தை பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே போதுமானதாகும்.

குஜராத் கலவரம் மாநில அரசினால் தூண்டிவிடப்பட்டது, மிகுந்த மதி நுட்பத் துடன் உயர்ந்த ஒரு நிலையில் திட்டமிடப் பட்டதாகும் என்று தெரிவிக்கும்,  மிகவும் நுணுக்கமாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ள  அறிக்கைகள் 45க்கு மேல் உள்ளன. பெரிய அளவிலான இந்த கலவரம் காவல்துறை மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினரால் கருத்துருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு, ரத்ததாகம் கொண்ட கலவரக் கும்பலாலும், பெண் களை வன்புணர்ச்சி செய்யும்  சங் பரிவார கும்பலாலும், மோடியின் அமைச்சர்களா லும், இந்துத்துவ தலைவர்களாலும் கள அளவில் செயல்படுத்தப் பட்டது.  இந்த ஆவணங்களில் தேசிய மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையும்,  புகழ் பெற்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய மக்கள் தீர்ப்பாயத்தின் பல தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளும் அடங்கும். மாநில அரசினால் திட்டமிட்டு தூண்டி விடப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட  பில்குஸ் பானு, ஜாகிய ஜாஃப்ரி போன்ற பெண்கள் உள்ளிட்ட, எண்ணற்ற கலவர நிகழ்ச்சிகளை நேரில் கண்ட சாட்சியங் களும் உள்ளன.

ஜாகிய ஜஃப்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், அவர் அளித்த சாட்சியங்களும், முன் வைத்த வாதங்களும் குஜராத் அரசுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பினையும், வன்முறைச் சம்பவங்கள் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பதை யும்  சுட்டிக் காட்டுகின்றன. மோடியையே கலவரத்துக்குக் காரண கர்த்தாவாகச் சுட்டிக் காட்டும் ஆதாரங்கள் பல உள் ளன. மாநில அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் நடைபெறுவ தற்கு முந்தைய நாள் அரசு உயர் அதி காரிகளின் கூட்டம் முதல்வர் மோடி வீட்டிலேயே நடத்தப்பட்டது ஒரு முக்கிய மான சான்றாகும். திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை பற்றியும் அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் மனித நேயமற்ற சூழலில் பட்ட துன்பங்கள் பற்றியும் இதர ஆவணங்கள் விரிவாகக் கூறுகின்றன. கத்திகள் கொண்டு பெண்கள் வயிறுகள் கிழிக்கப்பட்டுள்ளன. பெரும் அளவிலான பெண்கள் கும்பல் கும்பலாக வன்முறையாளர்களால் வன் புணர்ச்சி செய்யப்பட்டனர்.  மண்ணெண் ணெய் நிரப்பப்பட்ட தீப்பெட்டிகள் குழந் தைகளின் வாய்களில் திணிக்கப்பட்டன.  பெண்களும், குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் பத்திரிகையாளர்கள், சமூகத் தொண் டர்கள், வழக்கறிஞர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், அதிகாரிகள், திரைப் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பலராலும்  முறையாகயும், விரிவாகவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர் 2002 மார்ச் 19 அன்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டுள்ளார்:

அவர்களிடமிருந்து  கேட்ட செய் திகள் மற்றும்  நேரில் கண்ட நிகழ்ச்சி களில் ஒரு சிலவற்றையாவது கட்டாயமாக எழுதவேண்டும் என்று எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன்.  இவற்றைப் பற்றியெல்லாம் நாமெல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம் என்பதே இதன் கார ணம்.  அத்துடன், எனது மனச் சுமையை இதன் மூலம் நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலக்கூடும்.

தன்னைக் கொல்லாமல் விட்டு விடும் படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்? 19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி,  அதில் மின்சாரம் பாய்ச்சி அவர் களைக் கொன்றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?

தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னாலேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங் களால் என்ன கூற இயலும்? அவன் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்துவிட்டதால், அவன் இறந்து விட்டான் என்று நம்பி கலவரக் காரர்கள் விட்டு விட்டுச் சென்றதால் அச்சிறுவன் உயிர் தப்பினான். கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா-பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர், எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக் கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தில் ஒட்டு மொத்தமாக நடந்தேறிய காட்டாண்டி செயல்களில், பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமையை  ஒரு வன்முறைக் கருவி யாகவே  பரவலாக பயன்படுத்தியதைப் போன்று, இதற்கு முன் நடந்தேறிய எந்த  ஒரு கலவரத்திலும் நடந்ததாக  இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

இளம்பெண்களும், முதிர்பெண் களும் கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண் டேயிருந்தன. இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும்பத்து ஆண்களின் கண் முன் னாலேயே பாலியல் வன்முறை செய்து பின்னர்  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத்தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.

அச்சத்தினால் பீதியடைந்திருந்த பெண்களை மேலும்  அச்சுறுத்துவதற் காகவே,   அவர்களின் கண் முன்னா லேயே, ஆயுதம் ஏந்திய கலவரக்கார ஆண்கள் தங்களை நிர்வாணப்படுத் திக் கொண்டனர் என்ற செய்தியை ஆமன் சவுக் முகாமில் இருந்த பெண் கள் கூறினர்.

அஹமதாபாத்தில் நான் சந்தித்த - சமூகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், கலவரத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் - ஆகிய மக்களில் பெரும்பாலோர், குஜராத்தில் நடந்தது கலவரமே அல்ல என்பதையும், நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தீவிரவாத இனப் படுகொலையே அது என்பதையும் ஒப்புக் கொண்டனர்.  ஒரு வெளிநாட்டு எதிரியின் படை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல் போன்று நன்கு திட்டமிடப்பட்டு நடத் தப்பட்ட படுகொலை, கொள்ளையைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.



- (நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72516-modi.html#ixzz2oeWiyeAs

No comments:

Post a Comment