Wednesday, 5 March 2014

அத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவது எப்படி?

- மின்சாரம் -
கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் (இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி))

இந்தப் பிரிவுகளின் கீழ் குற்றஞ் சாற்றப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா?

சாதாரணமானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவி களை வகித்தவர்கள் ஆயிற்றே!

மத்திய தணிக்கைத்துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்துவிட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார் களே - அவர்கள் ஒன்றை சாமர்த்திய மாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

லிபரான் ஆணையத்தின் அறிக் கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.

68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.

மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங் குவார்.
எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்ற வாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை.

19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது.

ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக  வழக்கை நடத் தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?

19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்?

நீதிமன்றங்கள்தான் ஆகட்டும்; மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல்   மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்?

கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார்கள் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட் டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்?

காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.

சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை - _என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.

பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப் பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது.

அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற் புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும் பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா - பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை  ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என் றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்குகளை யாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என் றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா?

2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முசுலிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே -_ உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடி யதே -_ குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே -_ அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?

தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே - _ ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின்மீதும், நிருவாகத்தினர்மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்தியஅரசின் செயல்பாடுதான் என்ன?

ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது _ ஏன்?

அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச் சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே!

ஆனால் உண்மையோ வேறு வித மாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப் பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது.

கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்துவிட்டது. கலவரங் களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்பு களும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)

ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முசுலிம்களை வேட்டை யாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே.

கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரி களுக்கு முக்கியத்துவம் அற்ற துறை களும், தண்டனைகளும் கொடுக்கப் பட்டன என்றால் மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே!

கலவரங்களின்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற் றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர் கள்தான் அவர்கள்.

எந்தவித குறிப்பிட்ட செயல் திட் டமும் இன்றியே இந்த இரு அமைச்சர் களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு,  அலுவலகங்களுக்கு தவறான முடிவு களை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப் பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழு வின் தலைவரின் குறிப்பு -_ பக்கம் 12)

இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவ தற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான - _ சட்டப்படியான தகுதி இருக்கிறதா?

இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை?

இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா என்ற செங்குத்துக் கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

வீசுவது மோடி அலை அல்ல - அவர் வீசும் வலை! வலை!! உஷார்! உஷார்!!


நரபலி நாயகர் மோடி அவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி அலைகிறார்; காலையில் இம்பால், பகலில் கவுகாத்தி - மாலையில் சென்னை (வண்டலூர்) - அடுத்தது கேரளா (கொச்சி) என்று அலையோ என்று அலைகிறார்! இதனைத்தான் பதவிப் பசி காரணமாக முன்பு பல வித்தைகளில் ஈடுபட்டு, பரிதாபத்திற்குரிய சிலர் மோடி அலை வீசுகிறது என்றும், மோடியின் பேச்சைப் பற்றி மோடியின் கட்சிக்காரர்களுக்கே தெரியாத உரை நயங்கள், பாஷ்யங் களை தங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டு, இரண்டொரு சீட்டுப் பேரத்தை  கூடுதலாக முடிக்க கருப்புச் சால்வையை இழுத்து விட்டுக் கொண்டு ஆலாபரணகளைச் செய்கின்றனர்!

மோடி வித்தை என்பது இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறி விடுகிறது! என்னா விநோதம் பாரு!

குஜராத்தில் பட்டேல்மீது திடீர் பக்தி; நேருவுக்குப் பதில் வல்லபாய் பட்டேல் அல்லவா பிரதமராகி இருக்க வேண்டும் என்கிறார்! (அந்தக் கால கட்டத்தில் அவர் ஒன்று கருவில் இருந்திருப்பார் அல்லது மழலையாக தவழ்ந்திருப்பார்) மேற்கு வங்கம் செல்கிறார்; அங்கே மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக பிரணாப் முகர்ஜி  அல்லவா பிரதமராகியிருக்க வேண்டும் என்று வித்தை காட்டுவார்!!

தமிழ்நாட்டுக்கு வருகிறார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழுக்கு அமு தென்று பேர் என்று எழுதிச் சொல்லிக் கொடுத்ததை நன்கு கூறி தமிழ்க் காதல் கொட்டுகிறார்!
கேரளாவுக்குப் போகிறார். அங்கே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை, பிற்படுத் தப்பட்ட மக்களை ஈர்க்க புது வித்தையை - சமூக நீதிக் குல்லாய் போட்டு சங்கநாதம் செய்கிறார்!

இனிவரும் 10 ஆண்டுகளுக்கு தலித் துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் தான் என்று கூறுகிறார் - ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு அழகாக இயக்குகிறது -  இந்த மோடி வித்தைக்காரரைப் பார்த்தீர்களா?

திருச்சியில் இரண்டு மாதங்களக்கு முன் வந்து முழங்கிய மோடி அப்போது கூறியது அதற்குள் நம் மக்களுக்கு மறந்து விட்டதா?

மொழி வழி மாநிலம் அப்படியெல் லாம் பிரித்து நாட்டை நாசமாக்கி விட் டார்கள்; தேசத்தைத் துண்டாடி விட்டனர் என்றார்!

தேவை தகுதி, திறமை தான் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பகிரங்க மாகவே பேசினார்.

ஆனால் கேரளத்திலோ ராகம் - வித்தை மாறிவிட்டது!

சமூகநீதிமீது திடீர்ப் பாச மழை பொழிந்து தள்ளியுள்ளார். அது சரி சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் மண்டல் குழு அறிக்கை பரிந்துரையின் ஒரு பகுதியான வேலை வாய்ப்பை அமுல்படுத்திய தற்காக மந்திரை (இராமன் கோயிலைக் காட்டி) 10 மாதங்கள்கூட நிறையாத வி.பி.சிங் ஆட்சியை ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் வடிவமான - மோடியின் கட்சியான - பா.ஜ.க. கவிழ்த்ததே - அதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பொற் காலத்தை - 10 ஆண்டை ஒதுக்கி நடத்து வதற்கு முன்னோடித் திட்டமா?

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்தானே!

மீடியாக்களை விலைக்கு வாங்கி - இணைய தளத்தை ஏவுகணையாக்கி, பிரச்சாரப் பெரு மழை யினால் வெற்றி பெற்று விடத் துடிக்கும் மோடி வித்தைகள் தேர்தலில் எடுபடுமா? எடுபடாது!

மதவாதத்தின் கோரப்பற்களில் சிக்கி பலியானவர்கள் நினைவும், குஜராத்தில் சிறுபான்மையினரால் சிந்தப்பட்ட பச்சை ரத்தமும் இன்னமும் காய்ந்து விட வில்லையே!

கசாப்புக் கடைக்காரர் ஒருவர் சொன் னார் ஆட்டை வெட்டியது கத்திதானே தவிர, நானல்ல என்று.  அதுபோல காந்தி கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறித் தப்பிக்கப் பார்க்கிறது உஷார்! மோடி அலை அல்ல - வலை - வலை வீசுகிறார்!

மோடி புளுகு -4


- குடந்தை கருணா

அண்மையில் புதுடில்லியில் பேசிய நரேந்திர மோடி, விவசாயி களின் முன்னேற்றத்திற்காக குஜராத் தில் நிறைய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதேபோன்று நாடு முழு வதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பிஜேபி பாடுபடும் எனப் பேசினார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலிரா கிராமத்தில், மோடியின் பிரியத்துக்குரிய திட்டமான சிறப்பு முதலீடு பிராந்தியம் (Special Investment Region SIR) துவக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி, பெரு முதலாளி நிறுவனங்களுக்கு கொடுக் கப்பட உள்ளது. இதற்கு அங்குள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர். தோலிரா கிராமம் மட்டுமல்லாது, குஜராத் தலைநகர் காந்தி நகரிலும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தக் கிராம மக்கள் நர்மதா பாசனத் திட்டம் மூலம் தங்களது விவசாய நிலங்களான ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் பெற்று வந்தனர்.
இப்போது, இவர்களது நிலங்களை கையகப் படுத்துவதற்காக, அந்த பாசனத் திட்டத்தையே மோடி அரசு நிறுத்தி விட்டது. விவசாயிகள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மோடி அரசு, இதுபோன்று விவ சாய நிலங்களை கையகப்படுத்த முயல்வது புதிதல்ல; சில ஆண்டு களுக்குமுன், பாவ் நகர் பகுதியில், சிமெண்ட் ஆலை அமைத்திட, விவ சாய நிலங்களைக் கையகப்படுத்திட மோடி அரசு முயன்று, விவசாயிகள் உச்சநீதிமன்றம்வரை சென்று தடுத்து விட்டனர். சென்ற ஆண்டு, வட குஜ ராத்தில், சிறப்பு முதலீடு பிராந்தியம் துவக்கப்பட, மோடி அரசு முனைந்த போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக, நிறுத்தப்பட்டது.


தற்போது, தோலிரா கிராமப் பகுதிகளில் 920 சதுர மீட்டர் விளை நிலங்களை ஏறத்தாழ 15000 விவசாய குடும்பங்களை விரட்டி, கையகப் படுத்திட மோடி அரசு முனைந்து, அதற்கான சட்ட அறிவிப்பையும் செய்துள்ளது. மாற்றாக, வேறொரு பகுதியில் நிலங்கள் விவசாயிகளுக்கு தரப்படும் எனவும் மோடி அரசு கூறுகிறது. அண்மையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள, நில கையகப்படுத்தும் சட்டம் 2013, நிலங்களுக்கு, சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு, பணம் தர வேண்டும் எனக் கூறுகிறது. 

ஆனால், இந்த சட்டத்திற்குப் புறம் பாக, 2011 சந்தை விலையை மட்டுமே தர முடியும் என மோடி அரசு, விவ சாயிகளை அச்சுறுத்துகிறது. 

இத்தகைய, விவசாயக் கொள் கையை நிலை நாட்டும் மோடி தான்,  விவசாயிகளின் நலனுக்காக பாடு பட்டு வருவதாக, புதுடில்லியில் கதைக்கிறார்.

Tuesday, 4 March 2014

மோடி புளுகு - 6



தினமும், மோடி தனது சுய விளம் பரத்திற்காக, குஜராத் அரசின் பணத் தில், இந்தியாவிலுள்ள அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் முழு பக்க விளம்பரங்களாக தந்து கொண்டிருக் கிறார்.

பெண்கள் முன் னேற்றம், மேம்பாடு இவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறதாம்? 

 இன்றைய பத்திரிகையில், குஜராத் தில் சிறந்த நிர்வாகம் தரும் மோடி, நாடு முழுவதும் அதனை தர இருக்கிறாராம்.

அரசின் மதம், முதலில் இந்தியாவாம், அரசின் புனித நூல், அரசியல் சட்டமாம்;
அரசின் ஒரே ஈடுபாடு, தேச பக்தி தானாம், அரசின் ஒரே அதிகாரம், மக்கள் தானாம்;

 அரசின் ஒரே வழிபாடு, 125 கோடி இந்திய மக்களின் நல்வாழ்வு தானாம்; அரசின் ஒரே கடமை, கூட்டு முயற்சியாம், அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சியாம்.  சொல்கிறார், மோடி, யார்?

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி தன்னை, இந்து தேசியவாதி என வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட மோடி தான் இந்தியா முதலில் என்கிறார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட வைத்து, அப்பாவி பெண்களை சூறையாடுவதற்கு வழி வகை செய்த மாயா கோட்னானியை தனது அரசில் அமைச்சராக அமர்த்தி, பாதுகாத்தவர் சொல்கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

நடு ரோட்டில், கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே கருவாக இருந்த உயிரைக் கொன்று, அந்த பெண்ணையும் கொன்ற, பாபு பஜ்ரங் கியை பாதுகாத்த மோடி சொல் கிறார், பெண்கள் மேம்பாட்டைப் பற்றி.

 இந்து மதம் தான் இந்தியாவின் மதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்,எஸ்-இன் சேவகன் என வெளிப்படையாக கூறிக்கொள்ளும் மோடி சொல்கிறார், அரசின் மதம், இந்தியா தான் என்று.

மனு சாஸ்திரம் தான் புனித நூல் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரின் ஆத்மார்த்த ஊழியன் மோடி சொல்கிறார், அரசின் புனித நூல் அரசியலமைப்பு சட்டம் தான் என்று.

தனது மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க்ளுக்கு எந்த வித நல திட்டங்களும் செய்யாமல், அவர்களது நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி சொல்கிறார், அரசின் கடமை, அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்று. ஒரு முடிவோடு, மோடி களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

எத்தகைய பொய் சொன்னாலும், ஊடகங்கள் அதனைக் கண்டு கொள்ளாது; ஆனால், மக்களும் அப்படி இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.

- குடந்தை கருணா

Monday, 3 March 2014

மோடி புளுகு - 5


- குடந்தை கருணா

நேற்று உ.பி. தலை நகர் லக்னோவில் பேசிய நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், குஜ ராத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என பேசினார்.

இது உண்மையா? 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் பற்றிய விவ ரத்தை, நாடாளுமன்றத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் வெளியிட்டார். குஜராத் மாநிலம், மிக அமைதி மாநிலமாக உள்ளது என மோடியும் பிஜேபியும் கூறி வந்தாலும், மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக் கையில், வகுப்பு கலவரத்தில், பீகார் மாநிலத்தையும் மிஞ்சிய நிலையில், குஜராத் அய்ந்தாவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2012 ஆம் ஆண்டில் 57 வகுப்பு கலவரங்கள் நடை பெற்று, அய்ந்து பேர் இறந்துள்ளனர்; 2013 ஆம் ஆண்டில் 61 வகுப்பு கலவரங்கள் நடைபெற்று ஏழு பேர் இறந்துள்ளனர்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப் பெரிய இன அழிப்பு என்பதை மறைத்து, மோடி யும் பிஜேபியும் பேசுவது, எத்தகைய பாசிச மனம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த கலவரங்களில் பாதிக்கப் பட்டோருக்கு, இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை; ஏறத்தாழ 20000 சிறு தொழில் செய்யும் மக்கள் கல வரம் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத் அரசு அந்த மக்களுக்கு எந்தவித இழப்பீடும் இன்றுவரை தர வில்லை.
இந்த லட்சணத்தில், மற்ற மாநிலங்களில் பேசும் மோடி, ஏதோ தனது ஆட்சியில் குஜராத்தில் தேனா றும், பாலாறும் ஓடுவது போலவும், மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ்வது போலவும் பொய் மூட் டைகளை தினமும் அவிழ்த்து விடு கிறார்.


. இதனை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், மக்களை தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட ஊடகங்கள், அதற்கு மாறாக, மோடி யின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதையும், கருத்துக் கணிப்பு என்கிற பெயரில், திட்டமிட்டு, மோடியை உயர்த்திப் பிடிப்பதை யும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது உரிமையின் விலை, விழிப்புணர்வே.

Sunday, 2 March 2014

மோடி புளுகு -3

சென்ற ஆண்டு 2013 ஜூன் மாதத் தில், கேதார்நாத்தில் வெள்ளத்தினால் நிலச்சரிவு ஏற்பட்டு, சுற்றுலா சென்ற பல்லாயிரணக்கான மக்கள் இறக் கவும், பலர் மீள முடியாமல் தவிக்க வுமான நிலை ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், (தமிழ்நாடு உட்பட) பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுத்தன.

ஆனால் குஜராத் மாநில அரசு சார்பில், அதன் முதல்வர் நரேந்திர மோடி நேரடியாக அங்கே சென்று ஏறத்தாழ 15000 குஜராத் மக்களை இரண்டொரு நாள்களில் விரைந்து காப் பாற்றினார் என செய்தி பரப்பினர், மோடி புகழ் பாட, பல கோடிக் கணக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்கோ ஏஜென்சி  கஜகஸ்தான் சர்வாதிகாரிக்கும், அமெ ரிக்கப் புகையிலை அதிபர்களுக்கும் சேவை செய்யும் அமெரிக்க நிறுவன மான இந்த அப்கோ ஏஜென்சிதான், மோடிக்கு அமெரிக்க விசா கிடைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையும் மனதில் கொள்க. மற்ற மாநிலங்கள் பத்து நாட் களுக்கு மேல் போராடியும் வெள் ளத்தில் சிக்கித் தவித்த 40000 மக்களை காப்பாற்ற முடியாமல் திணறின, கேதார்நாத்பகுதி முழுவதும் வெள் ளத்தின் காரணமாக சாலைகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மோடியால் 15000 மக்களை எப்படி காப்பாற்ற முடிந்தது? மோடி இந்த சூப்பர் மேன் செயலுக்கு 80 இன்னோவா கார்களை பணியில் அமர்த்தி இரண்டு நாள் களில் 15000 பேரை காப்பாற்றினார் என கதை அளந்தது அப்கோ நிறுவனம்.

கேதார்நாத் பகுதியிலிருந்து பக்கத்தில் உள்ள டேகராடூன் என்ற ஊருக்கு சென்றால் தான் அங்கிருந்து ரயில் அல்லது விமானம் மூலம் புதுடில்லி சென்று அங்கிருந்து குஜராத் செல்ல முடியும். கேதார் நாத்திற்கும் டேகராடூனுக்கும் உள்ள தூரம் 221 கி.மீ. மலைப் பகுதி என்பதாலும், வெள்ளத்தால் சாலை கள் பாதிக்கப்பட்டதாலூம், 40 கி.மீ. வேகத்தில் செல்வதே கடினம். ஒரு முறை செல்ல 6 மணி நேரம் ஆகும். திரும்ப வர 6 மணி நேரம் ஆகும். 24 மணி நேரத்தில், காரை நிறுத்தாமல் சென்றால், இரு முறை தான் செல்ல முடியும்.

மோடி ஏற்பாடு செய்திருந்த 80 இன்னோவா கார்களும் ஒரு பயணத் திற்கு 720 மக்களை ஏற்றிச் செல்ல முடியும். 15000 மக்களை அழைத்து செல்ல 21 முறை செல்ல வேண்டும். ஆனால், 15000 மக்களை இரண்டு நாட்களுக்குள்ளாக 80 இன்னோவா கார்களில் ஏற்றிச் சென்று மோடி காப்பாற்றினார் என மோடி ஏற்பாடு செய்திருந்த அப்கோ நிறுவனம் மூலம் செய்தி பரப்புகிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மோடி புளுகு. அப்பட்டமான மோசடிப் புளுகு.

- குடந்தை கருணா

Saturday, 1 March 2014

சட்டத்திற்கு வெளியில் திரியும் நரேந்திரமோடி

இந்தியாவில் அண்மைக் காலத்தில் மிகக் கொடூரமாக மனிதன் என்று ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால் அது குஜராத்தை ஆண்டுகொண்டிருக்கும் - பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி என்ற நர வேட்டை நாசகாலர்தான்.

இந்த மனிதரை உச்சநீதிமன்றம் சாடியதுபோல வேறு ஒருவரையும் சாடியது கிடையாது. நீரோ மன்னன் என்பதைவிட வேறு கேவலமான பட்டம் ஓர் ஆட்சியாளனுக்கு வேறு உண்டா?

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்தும், அதிகார ஆயுதத்தைப் பயன்படுத்தியும் தப்பித்துக் கொண்டு வரும் இந்த மோடி இப்பொழுது உயர் காவல்துறை அதிகாரி உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள மனுவின் மூலம் அம்பலப்பட்டுள்ளார்.

குஜராத்தில் கலவரம் திட்டமிட்ட வகையில் தூண்டி விடப்பட்ட போது மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் என்பவர்தான் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்; அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்தபோது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தைக் கண்டுகொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம்'' என்று சொன்னார்.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வுக் குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர் களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைக்க உத்தரவிட வேண்டும். - இவ்வாறு மனுவில் காவல் அதிகாரி கூறி இருக்கிறார். பொறுப்பு வாய்ந்த அதிகாரி, அதுவும் குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய உயர்நிலை காவல்துறை அதிகாரி உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாகப் பகிரங்கமான குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார் என்பது சாதாரணமானது அல்ல. இந்தப் பிடியிலிருந்து மோடி தப்பிப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

இந்த நிலையில் மோடி தனது வழக்கமான பாணியில் தற்போதைய குஜராத் மாநில காவல்துறைத் தலைமை முன்னாள் இயக்குநர் சக்ரவர்த்தி என்பவரைவிட்டு  விட்டு முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவேயில்லை என்று கூறச் செய்துள்ளனர்.

எவ்வளவு பலகீனமான இடத்துக்கு ஒரு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளார் என்பதற்கு இது ஒன்றுபோதும்.

டி.ஜி.பி.யின் கூற்று உண்மையாகவே இருக்கட்டும். முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டனரே - மோடி அமைச்சரவையில் முக்கிய  அமைச்சரான ஹரே பாண்ட்யா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்தானே? உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய இதே தகவலை அப்பொழுதே கூறியுள்ளாரே!

அந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக அமைச்சர் ஹரேன் பாண்டியா அடுத்துக் கொல்லப்பட்டதுதான் மிச்சம். என் மகன் கொல்லப்பட்டதற்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று அவரது தந்தையார் அப்பொழுதே கூறினாரே!

மோடியின் கதையைத் தோண்டத் தோண்ட பல மர்மப் பூகம்பங்கள் வெடித்துக் கொண்டேதான் இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறியதுபோலவே குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய கூடுதல் காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் என்பவரும் மோடியின் சட்ட விரோத செயல்பாடுகளை நானாவதி ஆணையத்தின் முன் கூறியதுண்டே!

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (குஐசு) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் (பப்ளிக் பிராசிக்கூட்டர்) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தின. நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நானாவதி ஆணையத்தின்முன் கூறியவர் சாதாரணமானவர் அல்லர்; மோடி அரசாங்கத்தின் கூடுதல் தலைமைக் காவல்துறை அதிகாரி.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக் குழு கண்டு கொள்ளவில்லை என்பதுதான். அதே போல நானாவதி ஆணையமும் இன்னொரு காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் கூறிய வாக்குமூலத்தையும் பொருட்படுத்தவில்லை.

நரேந்திரமோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ள வில்லை என்று ஒரு உயர் நிலைக் காவல்துறை அதிகாரி கூறுகிறார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே!
எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யக் கூடிய தீய மனிதர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் இருந்தால் நீதியும், விசாரணையும்கூட தலைக்குப்புற விழுந்து விடும் என்பதற்கு வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.

மோடியின் ஆட்சி எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதற்கு மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் மேமோன் என்பவர் குறிப்பிட்ட மோடி பற்றிய ஒரு கருத்துப் போதுமானதாகும்.

மோடி ஆட்சியில் பொடா பயங்கரவாதிகளை ஒடுக்கும் சட்டமல்ல; மாறாக பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் சட்டம் (Protection of Terrorist Act - Pota)  என்று வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டாரே - இதற்குமேல் என்ன சொல்ல!

மோடிகளை சட்டத்துக்கு வெளியே அனுமதிப்பது கலவரங் களுக்கு நாளும் பந்தக்கால் முகூர்த்தம் நடத்திக் கொண்டிருப் பதற்குச் சமமாகும் - எச்சரிக்கை. மோடியைத் தண்டிப்பதன் மூலம்தான் நாட்டின் சட்டம், நீதிக்கான மரியாதையை நிலை நிறுத்த முடியும்.