Thursday, 30 January 2014

மாநில மொத்த உற்பத்தியும் (GSDP) மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்

மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து தொடர்ந்தது எழுதி வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (Paid News), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....
-------------------------------------------------------------------------------------------------
மாநில மொத்த உற்பத்தியும் (GSDP)
மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்
(Long Read)
- Narain Rajagopalan

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியினை (பொருட்கள் மற்றும் சேவைகளை )(Gross Domestic Product - GDP) வைத்து தான் அந்த நாடு முன்னேறியிருக்கிறதா. தேங்குகிறதா. அல்லது பின்னேறுகிறதா என்பதை சொல்ல முடியும். இதையே ஒரு மாநிலத்துக்காக சுருக்கினால் அது தான் GSDP - Gross State Domestic Product. ஒரு மாநிலத்துக்குள் ஒரு வருடத்தில் உருவாகும் பொருட்கள் & சேவைகளின் மொத்த பயன்பாட்டை பணமாக அளவீடுவது தான் இது.

உ.தா போன வருடம் GSDP ரூ.100 என்று வைத்துக் கொண்டால், இந்த வருடத்தில் GSDP ரூ.110 ஆக மாறியிருந்தால், மாநிலம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பொருட்களும், சேவைகளும் பெருகுகிறதென்று பொருள். மாறாக இந்த வருடம் ரூ.90 என்றால் தேக்கமோ, மந்தமோ, தொய்வோ ஏற்பட்டிருக்கிறது. 10% குறைவான பொருட்கள் + சேவைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இந்த அடிப்படைத் தெரிந்தால் போதும். இந்தியாவில் ப்ளானிங் கமிஷன் இதை அளவிட ஆறு காரணிகளை முன்வைக்கிறது.

விவசாயம் மற்றும் அதற்கிணையான தொழில்கள் (Agriculture and Allied)
நேரடி விவசாயம் (Agriculture)
தொழில்துறை (Industry)
சுரங்கம் மற்றும் குவாரிகள் (Mining and Quarrying)
உற்பத்தித் துறை (Manufacturing)
சேவைகள் (Services)

இந்த ஆறு காரணிகளின் வருடாந்திர உயர்வு / தாழ்வில் தான் ஒரு மாநிலத்தின் ஏற்றமும் / இறக்கமும் இருக்கிறது.

இந்தியாவின் அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் - குஜராத்
இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்

மேற்சொன்னவை அத்தனையுமே குஜராத் அரசாலும், வெவ்வேறு ஊடகங்களாலும் முன் வைக்கப்படும் செய்திகள். இதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கிறது ?

நான் ப்ளானிங் கமிஷனின் ஒரு டேட்டா டேபிளை முன்வைக்கிறேன். இது 2004-05 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு 2012-13 வரைஇந்த ஆறு காரணிகளுக்கான வளர்ச்சியை மாநிலம் தோறும் கணித்திருக்கிறது. மாண்டேக் சிங் அலுவாலியா வேண்டுமென்றே குஜராத்துக்கு குறைவான மதிப்பீடுகள் போடுவார் என்று நினைத்து இதைப் படித்தால், சாரி இப்போதை கிளம்பிவிடுங்கள். உங்களோடு பேச முடியாது. நேரடியாக மத்திய அரசின் கீழ் வந்தாலும், ப்ளானிங் கமிஷன் சி ஏ ஜி, ரிசர்வ் வங்கி, செபி மாதிரி தனியான ஒரு அமைப்பு. இதனுடைய டேட்டாவினை அடிப்படையாக வைத்து தான் பேச முடியும்.

இப்போதைக்கு குஜராத், ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தமிழகம் இந்த ஐந்து மாநிலங்களையும் ஓப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். (குஜராத்தினுடைய 2012-13 டேட்டா ப்ளானிங் கமிஷனிலேயே இல்லை. ஆகவே நாம் 2011-12 வரைக்குமான வளர்ச்சி / தேய்வு ஒப்பிட்டினை மட்டும் செய்வோம்)

பார்க்க Datasheet 1

மஞ்சள் பட்டை - குஜராத்
நீலப் பட்டை - பீகார்

2004-05 விலைவாசியில் குஜராத் ஆரம்பிப்பது 203,373 கோடிகள்; பீகார் ஆரம்பிப்பது 77,781 கோடிகள்.

2011-12 முடிவில் 2004-05 விலைவாசியில் குஜராத் 398,884 கோடிகள்; அதாவது எட்டு வருடத்தில் ஆரம்பித்ததிலிருந்து சற்றேறக் குறைய இரண்டு மடங்கு (406,000 கோடிகள் தேவை. சல்தா ஹே!)

ஆனால் பீகார் இதே காலகட்டத்தில் செய்திருப்பது 246,995 கோடிகள்; எட்டு வருடத்தில் மூன்று மடங்கிற்கும் மேலான வளர்ச்சி.

இந்த எட்டு வருடங்களில் பீகார் வெறும் 77,000 கோடிகளில் ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம். குஜராத் ஆரம்பிப்பது அதைப் போல இரண்டு மடங்கிற்கும் மேலே. ஆனால் எட்டு வருடங்கள் கழித்து வளர்ச்சி விகிதத்தை சராசரியாய்ப் பார்த்தால் வருவது இது தான்

குஜராத் - 10.13%
பீகார் - 18.84 %

அந்த ஃக்ராப்பினைப் பார்த்தால் 2005-06-இல் மட்டும் தான் பீகாரின் வளர்ச்சி விகிதம் (6.05%) குஜராத்தை (14.75%) விட பின் தங்கியிருக்கிறது. அங்கிருந்து எடுக்கிறது வேகம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு முறையும் பீகார் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்திற்கு குறையவே இல்லை. இதில் நான்கு வருடங்களில் வளர்ச்சி விகிதம் (போன வருடத்தோடு ஒப்பிடுகையில்) 20%+ ஆனால், குஜராத் ஒற்றை இலக்க வளர்ச்சியோடு மூன்று வருடங்களையும், 2010-11-இல் முட்டி மோதி ஜஸ்ட் பாஸ் நிலையில் இரட்டை இலக்க வளர்ச்சியோடு நிற்கிறது. ஆக எட்டாண்டுகள் மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய சராசரியை விட குஜராத் அதிகமாக வளர்ந்திருக்கலாம். ஆனால், பீமாரு என்று நக்கலடிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் மாநிலமான பீகாரின் வளர்ச்சியை தொடக் கூட முடியவில்லை.

இது தான் குஜராத் வளர்ச்சி மாடல். இந்த மாடலை தான் அவர் இந்தியா முழுமைக்கும் முன் வைக்கிறார். There is absolutely no reasoning for why we should go for this model, when statistically it is very clear that the model has its limitations & issues. It is vividly clear about governance deficit & administrative inability to take the State to growth trajectory sustain-ably.

இந்த க்ராபிலேயே உங்களால் ராஜஸ்தான், ஆந்திரா, தமிழக விவரங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் இந்த எட்டாண்டுகளில் மூன்று ஆட்சிகள் (2005-06 அதிமுக / 2006 - 11 திமுக / 2011 - 12 அதிமுக மீண்டும்) மாறியிருக்கின்றன. வழமையாய் ஆட்சி மாறினால் திட்டங்கள் தொய்வுறும். அப்ரூவல்கள் நிற்கும். முந்தின ஆட்சி முன்வைத்த திட்டங்களை ஆளும் கட்சி எடுத்து நடத்த யோசிக்கும். இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை. நடந்தவை. ஆனால் இத்தனையும் தாண்டி, தமிழகம் புலிப்பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. தமிழகத்தின் சராசரி எட்டாண்டு கால வளர்ச்சி (ஒப்பீட்டளவில்) குஜராத்தை விட அதிகம் (10.30% சராசரி). ஆக இனிமேல் தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பிடத் தேவையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் ஆரம்ப 2004 -05 அடிப்படையே 219,003 கோடிகள், குஜராத்தை விட 16,000 கோடிகள் அதிகமாய் ஆரம்பிக்கிறது. TN has entered into the Developed State league in alignment with Maharastra & Delhi.

ஆக கடந்த எட்டாண்டுகளில், டெக்னிகலாக இந்தியாவின் வேகமாக வளர்ந்த மாநிலம் - பீகார்.

குஜராத்தில் வளர்ச்சி பரவலாக நடக்கவில்லை. மேலும் கீழுமாக தான் போயிருக்கிறதேயொழிய சீரான வளர்ச்சி இல்லை. ஆகவே குஜராத் இந்தியாவின் நம்பர் 1 வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இனிமேல் சொல்லாதீர்கள். They have done an okay job for growth, not spectacular sustainable growth traction. ஆக அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் என்கிற claim இத்தோடு முடிந்தது.

முதலும் முக்கியமுமான விக்கெட் காலி.

ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாற்றுக் கருத்துக்கள், மாற்று வளர்ச்சி மாடல்கள் கொண்ட மாநிலங்களை (குஜராத் / பீகார்) எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காரணியாக அலசுவோம்.

பீகாரில் மின்சாரம் 60% இருந்தால் பெரிய விஷயம். சரியான தரவுகள் இல்லை. குஜராத் பீற்றிக் கொள்வது near 100% மின்சாரம். இதை ஏற்கனவே நாம் உடைத்து விட்டோம். ஆனாலும் ஒரு வாதத்துக்கு இப்போதைக்கு குஜராத் சொல்வதையை அடிப்படையாகக் கொள்வோம்.

பார்க்க Datasheet 2

நீலப்பட்டை - விவசாயம் + சார்புகள்
ஆரஞ்சுப் பட்டை - நேரடி விவசாயம்
பிங்க் பட்டை - தொழில்துறை
பச்சைப் பட்டை - உற்பத்தித் துறை

முதலில் பீகாரை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தானே பரிதாபமான நிலையில் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. விவசாயம் + சார்புகளிலும், நேரடி விவசாயத்திலும் கிட்டத்திட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறார்கள் (24,530 Vs 65,102 / 20,673 Vs 58,113) எட்டாண்டுகளில் ஆட்சியமைப்பும், அரசாங்கமும், அரசும் ஒழுங்காக இல்லாமல் இது சாத்தியமேயில்லை. இந்த எட்டாண்டுகளில் 2007-08 / 2009 -10 காலக்கட்டங்களில் மட்டுமே முந்தைய ஆண்டை விட கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஈடாக வெறித்தனமாக முன் / பின் ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு ஈடான காலக்கட்டத்தில் குஜராத்தில் என்ன நடந்திருக்கிறது ?

விவசாயம் + சார்புகள் விஷயத்தில் 60% முன்னேறியிருக்கிறார்கள் (32,706 Vs 51,525) இதிலேயே மூன்று வருடங்களில் நடுவில் சுணக்கமிருக்கிறது.

நேரடி விவசாயத்தில் சரி அடி வாங்கியிருக்கிறார்கள். ஜான் ஏறினால் கி.மீ சறுக்கியிருக்கிறது. எட்டாண்டுகளின் வளர்ச்சி 70% மட்டுமே. மூன்றாண்டுகள் இங்கேயும் மரண அடி. இந்த காலகட்டங்களில் குஜராத் அரசு இந்த வருடங்களை (2006 - 07 / 2008 - 09 / 2009 -10) Drought ஆக அறிவித்திருக்கிறதா என்று கெஜட்டில் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி சீராக இல்லை என்பதை டேட்டா சொல்கிறது.

தொழில் துறை: குஜராத் அரசு போகிற இடங்களெல்லாம் பறை சாற்றும் கோஷம். Fastest growing Industrialized State in India.
2004 - 05 - 89,321
2011 - 12 - 163,826

அட்டகாசம், எட்டாண்டுகளில் கிட்டத்திட்ட இரண்டு மடங்கு (90% வளர்ச்சி) மின்சாரம் செய்திருக்கும் வேலையாகக் கூட இருக்கலாம். மின்சாரமே இல்லாத டூபாக்கூர் ஊரான பீகார் எப்படி தொழில்துறையில் பயணித்திருக்கிறது ?

2004 - 05 - 10,706
2011 - 12 - 48,212

இந்த டேட்டாவினை முதல்முறையாகப் பார்த்தப் போது மிரண்டு போய் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. எட்டாண்டுகளில் 400% வளர்ச்சி. நிதிஷ் குமார் இதை ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திருந்தால் இந்நேரம் நிறுவனம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி தள்ளியிருக்கும்.

இத்தனைக்கும் ஊரிலிருக்கக் கூடிய எல்லா disadvantage-களும் இருக்கக்கூடிய மாநிலம் பீகார். கரெண்ட் கிடையாது. முழுமையான சாலைகள் கிடையாது. திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடையாது. இதையெல்லாம் வைத்துக் கொண்டே இந்த மனிதர் இதை செய்திருக்கிறார் என்றால் ஒரளவுக்கு நல்ல கட்டமைப்பும், வசதிகளும் இருந்தால் பீகார் முன்னணி மாநிலமாக ஏன் மாறாது ?

கட்-ஆப்ல 95% வாங்கினவன் பாஸ் பண்றது பெரிய விஷயமே இல்லை. 40% பார்ட்டர் பாஸ் பண்ணவன் பர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறது தான் சாதனை. அந்த வகையில் பீகாரில் எட்டாண்டுகளில் நடந்திருப்பது அசாத்தியமான administrative சாதனை. எல்லாத் தளங்களிலும் நிர்வாகமும், தெளிவும் இருந்தாலேயொழிய அந்த மாதிரியான ஒரு மாநிலத்தை இப்படி தலைகீழாகப் புரட்டிப் போடவே முடியாது.

இறுதியாய் மோடி அடிக்கடி சொல்லும் தொழிற்சாலைகள் அடங்கிய உற்பத்தித் துறை.

குஜராத்துக்கும் பீகாருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. குஜராத்தின் ஆரம்பத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பீகாரில்லை (G: 55,443; B: 4,379)

எட்டாண்டுகளில் குஜராத் மேலேறி சாதித்திருப்பது 112,521 அதாவது கிட்டத்திட்ட இரண்டு மடங்கு. மறுக்க முடியாத சாதனைதான்.

ஆனால் ஒன்றுமேயில்லாத, கரண்ட்டில்லாத ஒரு மாநிலம் அதே காலக்கட்டத்தில் நான்கு மடங்கு தாண்டியிருக்கிறது (12,705)

இவை வெறும் எண்கள் அல்ல. இதற்கு பின் இரண்டு மாநில தலைமைகளின் ஆளுமையும், நிர்வாகத் திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இத்தனைக்கு பிறகும், மோடி முன்வைக்கும் புகழாரங்களுக்கு அவர் தகுதியானவர் தானா ? தகுதியானவர்கள் எல்லாம் சத்தமேப் போடாமல் சாதித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய ஒப்பீட்டளவில் பெரியதாய் leap frogging எதுவுமே செய்யாத ஒருவரை எப்படி ஏற்றுக் கொள்ள சொல்கிறீர்கள் ?

//இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்//

இனி நீங்கள் முடிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த வாசகங்களில் உண்மை இருக்கிறதா அல்லது தன்னை பட்டவர்த்தனமாக முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு அதிகாரவெறி பிடித்த ஆளுமையின் குரல் இருக்கிறதா என்பதை!

No comments:

Post a Comment