Wednesday, 9 November 2011

சட்டத்தின் பிடியில் மோடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, வளைந்து வளைந்து ஓடி தப்பித்துக் கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாப்ரி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான முட்டுச் சந்தில் திணறிக் கொண்டு நிற்கிறார்.

உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சாதகமான அறிக்கையை கொடுத்த நிலையிலும், வழக்கினை உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டே  விசாரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்ட நிலை யிலும், மோடி குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி விட்டது என்று நிர்வாணக் கூத்தாடினர்.

இதில் ஓர் ஆச்சரியம். தெகல்கா புலனாய்வு செய்து நேரிடையாக சாட்சியங்களைப் பதிவு செய்த தகவல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வெகு ஆச்சரியமான ஒன்றே!

இப்பொழுது ஒரு நம்பிக்கை ஒளி பளிச்சென்று பரவியுள்ளது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை சுதந்திரமான முறையில் சாட்சிகளுடன் விசாரணை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு இராமச்சந்திரன் என்பவர் நடுநிலை விசாரணை நபராக (ஹஅஉரளபரசயைந) அறிவிக்கப்பட்டார். அவர் விசா ரணை செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளுக்கு மாறாக மோடியின் மீதான குற்றச்சாற்றுகளுக்குப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன; குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தன்று (2002 பிப்ரவரி 27) முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய உயர்மட்டக் குழுவில் கலந்துகொண்ட சஞ்சய் பட் என்னும் உயர்நிலைக் காவல்துறை அதிகாரி உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மோடிக்கு நெரிகட்டச் செய்துவிட்டது! அந்தக் காவல்துறை அதிகாரி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை என்று ஒரு போடு போட்டால் தீர்ந்தது பிரச்சினை என்கிற வடிவத்தில் குஜராத் பா.ஜ.க. ஆட்சி வழக்கைத் திசை மாற்றிவிட்டது.

நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட அமிக் கஸ்கூரி ராமச்சந்திரன் அறிக்கையோ வேறு விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. சஞ்சய்பட் என்ற காவல்துறை அதிகாரி உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா- இல்லையா என்பதை நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும்பொழுது தான் உண்மை தெரியும் என்று கூறியுள்ளார்.

பந்து இப்பொழுது நீதிமன்றத்தின் மைதானத்தில் உள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (சமூகங்களுக்கிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் தூண்டுதல்) 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்துகொள் வது) 505 (பொதுமக்கள் மத்தியில் துவேஷங்களை உண்டு பண்ணுவது) 166 (சட்டத்துக்கு முரணாக காயம் ஏற்படுத்திட அரசு அலுவலர்கள் நடந்து கொள்வது) போன்ற பிரிவுகளில் மோடி தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் கொடுத்த அறிக்கையை ஒருக்கால் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக்கொள்ளாது மறுக்குமேயானால், ஜாப்ரியின் மனைவி ஜாஹியா அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயதே நிறைந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் மூவர் என்கவுண்டர் பெயரில் சுட்டுக் கொன்ற உண்மை இப்பொழுது உறுதி செய்யப்பட்டு விட்டது.

மேலும் மேலும் சட்டத்தின் பிடியில் இறுகும் நிலைதான் மோடிக்கு! நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து தான் மோடியின் எதிர்காலக் கனவுகள் பலிக்குமா- பலிக்காதா? என்ற நிலை எட்டப்படும்.

எப்படி இருந்தாலும் மோடி என்ற நபர் கொடூர மானவர், மதவெறியர் - சிறுபான்மை மக்களைக் கூண்டோடு ஒழித்துக் கட்ட எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் என்ற பொதுவான கருத்து இந்திய மக்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மையாகும்!

Saturday, 24 September 2011

மோடியைத் தூக்கி நிறுத்துவதன் பின்னணி!

இந்து மதவெறியர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் என்று தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ஊடகங்கள் - குறிப்பாக துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி உள்ளிட்டோர், மோடியின் மோசமான மனிதகுல விரோத நடவடிக்கை களைப் புறந்தள்ளி, அவற்றை மூடி மறைத்து, மோடி சிறந்த நிருவாகி, அவர் ஆட்சி செய்யும் குஜராத்  மாநிலம் பொருளாதார நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பது போன்ற பிரச்சாரத்தை சாவி கொடுத்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி மீதான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், இனி ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒருவரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் போதும் என்று சொல்லிவிட்டதாம். அதை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக வழக்கைத் தொடுத்தவர், இந்தத் தீர்ப்பில் திருப்தியடையாத திலிருந்தே உச்சநீதிமன்றம் மோடிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறி விட்டதாக சோவுக்கே உரித்தான முறையில் எழுதுகோல் ஓட்டியுள்ளார்.

இதில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வதேரா என்னும் இடத்தில் முஸ்லிம் ஒருவர் நடத்திய பெஸ்ட் பேக்கரியில் 14 முஸ்லீம்களை விறகுகள் போல் கை கால்களைக் கட்டி, பேக்கரி அடுப்பில் வைத்துக் கொளுத் தப்பட்ட வழக்கில், குஜராத் மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் குற்றவாளிகள் 21 பேர்களையும் விடுதலை செய்த வழக்குபற்றி உச்சநீதிமன்றம் என்ன கருத்து தெரிவித்தது?

சட்டத்தின் பார்வையில் அது விடுதலையே அல்ல என்று கூறவில்லையா?

தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவு மதிக்கத்தக்கவையல்ல - நம்பிக்கைக்கு உரியதும் அல்ல.

மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது மகாத்மா காந்தி மதித்த அனைத்துக் கோட்பாடு களையும்  உதாசீனப்படுத்தும்படியான அளவுக்கு சிலர் போய் விட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது. எந்தவிதப் பாதுகாப்புமற்ற அப்பாவிக் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின்அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓரவஞ்சகமும், ஒரு தலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பான்மை இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் சொன்னதையெல்லாம் வசதியாக மறக்க - மறைக்க முயலுகிறார் திருவாளர் சோ.

பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்கில் 21 பேர்களையும் சிறிதும் தயக்கமின்றி விடுதலை செய்த மாவட்ட நீதிபதிக்கு முதல் அமைச்சர் மோடி அளித்த பரிசு என்ன?

மாநில மின்சார வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்; மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், பங்களா, கார், தொலைப்பேசி, உதவியாளர்கள் என்று சலுகைகளை வாரி இறைத்தார் முதல் அமைச்சர் மோடி என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நீதிமன்றங்களையே மாநில அளவில் தன் கையில் சுருட்டி வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை குஜராத்தில் நிலவும்போது, மோடிமீது சுமத்தப்பட்ட வழக்கை இனி மாஜிஸ்ட்ரேட் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம் என்பது எவ்வளவு பலகீனமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணையை இனி துவக்கவேயில்லை; தீர்ப்பும் அளிக்கப்படவில்லை; இந்த நிலையிலேயே மோடி பெரிய வெற்றி பெற்றதாக ஊடகங்களும், ஏன் மோடியும்கூட நினைக்கின்றனர், வாண வேடிக்கை விடுகின்றனர் என்றால் இதன் பொருள் என்ன? மாஜிஸ்டிரேட்டின் தீர்ப்பை இவர்களே முடிவு செய்து விட்டனர் என்பது விளங்கவில்லையா?

மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறியதும் இதே உச்சநீதிமன்றம்தான், வழக்கை வெளி மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டதும் இதே உச்சநீதிமன்றம்தான்! அதற்கு மாறான ஆணையை இப்பொழுது பிறப்பித்திருப்பதும் அதே உச்சநீதிமன்றம் தான் என்னே வேடிக்கை!

இந்தியாவையே குஜராத் மாநிலமாக்கிட வேண்டும்; சிறுபான்மையினரை ஒடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் கொன்று குவிக்க வேண்டும்; அதற்கு முற்றிலும் தகுதியானவர் - திறமையானவர் நரேந்திரமோடிதான் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பன சக்திகள் - இந்துமத அடிப்படைவாதிகள் - சங்பரிவார்க் கும்பல், பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு, மோடியை உண்மைக்கு விரோதமாக ஜோடனை செய்து பொய்யான தகவல்களைப் பரப்பிக் கொண்டு வருகின்றன.

பொது மக்களே உஷார்! உஷார்!!

Tuesday, 20 September 2011

மோடியின் உண்ணாவிரதம்

மத நல்லிணக்கத்துக்காக குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதமாம்! ஆம், ஆடுகளுக்காக ஓநாய் உண்ணாவிரதம் இருக்கிறது - புள்ளிமான்களின் உரிமைக்காக, நன்மைக்காக புலிகள் மாநாடு நடத்துகின்றன; எலிகளின் வாழ்வுரிமைக்காக பூனைகள் கூடிப் பேசுகின்றன என்பதைக்கூட நம்பினாலும் நம்பலாம்! மதநல்லிணக்கத்துக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை நம்ப முடியுமா? பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சோ குருமூர்த்திகள் அடுத்த பிரதமர் மோடிதான் என்று கொஞ்ச காலமாகவே காற்றடித்துக் காற்றடித்து விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், மாவட்ட நீதிமன்ற அளவிலேயே மோடி மீதான வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாம்; அவ்வளவு தான் மோடியைக் குற்றமற்ற நிரபராதி என்றே உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது போல வாண வேடிக்கைவிட ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவுப் பெரிய மோசடி! இதே உச்சநீதிமன்றம் இதே மோடியைப்பற்றி இதற்குமுன் என்ன கூறியது?

ஆதரவற்ற குழந்தைகள், அபலைப் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பொழுது முதல் அமைச்சர் நரேந்திரமோடி அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நீரோ மன்னன் என்று சொல்லவில்லையா? உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனத்துக்குப் பிறகு மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாவா செய்தார்?

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு 95 பேர் மரணம் அடைந்த போது, மோடியின் ஆட்சியில் 22 மணி நேர இடைவெளியில் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிர்விளைவே இஸ்லாமிய மக்களின் படுகொலை என்று தான் ஒரு முதல் அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விமர்சனம் செய்யவில்லையா மோடி?

சர் அய்சக்நியூட்டன் கூறியதையெல்லாம் எடுத்துக்காட்டவில்லையா? எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்று இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது விஞ்ஞான ரீதியாக சரிதான் என்று சொன்ன கொடுங்கோலன் - இப்பொழுது மத நல்லிணக்கத்துக்காக உண்ணா விரதம் இருக்கிறாராம்.

பெரு முதலாளிகள் பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்?

நாட்டை இந்துக்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வேற்று மதக்காரர்கள் இன்னொரு பக்கம் என்று பிரித்து நாட்டை மதவாரியாகத் துண்டு போட்டு ஆட்சி நடத்த வேண்டும்; ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் சதியாகும்.

மதச் சார்பின்மை என்பது பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதல்ல. இதில் மாற்று மதக்காரர் களுக்கு சலுகைகள், வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு.

வேறு சில நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது, இந்தியா ஏன் ஒரு இந்து நாடாக இருக்கக் கூடாது? என்பதுதான் அவர்களின் நோக்கமும் - ஆசையும்.

அந்த இந்து ராஜ்ஜியம் என்பது என்ன? மனுதர்ம ராஜ்ஜியம்தானே? நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 மக்களாக இருப்போர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே அந்த இந்து ராமராஜ்ஜியம்?

ஒரு பார்ப்பான் பிரதமராக இருந்து இந்து ராஜ்ஜியம் நடத்தினால் பார்ப்பனர் அல்லாதார் மக்கள் மத்தியில் விரைவில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் நரேந்திரமோடி போன்ற சூத்திரர் களைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்வது என்ற தந்திரம்தான் இதன் பின்னணியில்!

உண்மையான புலிகளைவிட வேடம் போட்ட புலிகள்தானே அதிகமாகக் குதிக்கும்?

இருப்பதிலேயே மிகவும் குரூரமான ஓர் ஆளைப் பிடித்து பிரதமராக்க வேண்டும் என்பது - பார்ப்பனர்களின் ஆழமான சதி; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Saturday, 5 March 2011

இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி சிக்குவாரா?

2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நர வேட்டை நரேந்திரமோடி - தனது ஆட்சி அதிகாரத் தின் முழுபலம் கொண்டு சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடித் தாகம் தீர்த்தார். புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ராஜபக்சே என்றே வைத்துக் கொள்ளலாம்.

சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்கள் எல்லாம் கொடிய தீயின் நாக்குக்கு ருசியாகின.

கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்தக் காட்டு மிராண்டிகளின் கத்திக் குத்துகளுக்குத் தப்பவில்லை.

ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி இந்துத் துவக் கொடியவர்களால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா அம்மையாரின் கடும் முயற்சிக்குப்பிறகு உச்சநீதி மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக்குழு குஜராத் முதல் அமைச்சர் மோடியைப் பல மணி நேரம் விசாரித்தது.

இந்த வழக்கில்  குஜராத் மாநில உளவுத்துறை முன்னாள் தலைவர் சஞ்சீவ்பட்டின் பிரமாண வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

காவல்துறை அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சராகவிருந்த நரேந்திரமோடி எத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை எல்லாம் அவர் போட்டு உடைத்து விட்டார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம், முஸ்லீம்களைத் தண்டிக்க வேண்டும்? கலவரங்களைக் காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்தார். முதல் அமைச்சர் என்கிற தகவல்களை எல்லாம் இந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தக் காவல்துறை அதிகாரி மாத்திரம் அல்ல; கலவரத்தின் போது காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலாக விருந்த ஸ்ரீகுமார் நானாவதி ஆணையத் தின் முன்னர் என்ன கூறினார்?

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் இதற்குத் துணை போனார்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாரே!

குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி - படுகொலை சாதாரணமானதா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகு கட்டைகளைக் கட்டுவதுபோல கட்டி பேக்கிரியின் அடுப்பில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்தார்களே கொடூரக்காரர்கள் - அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த ஜாஹிரா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிடவில்லையா?

14 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததே!

வழக்கை குஜராத்திலிருந்து மும்பையில் நடத்த உத்தரவிட்டதே! இதில் என்ன கொடுமை தெரியுமா? வழக்குத் தொடுத்த அந்த ஜாஹிராவே பிறகு பல்டி அடித்துவிட்டார். இல்லை பல்டியடிக்க வைக்கப் பட்டாரே! எந்த நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள் பிஜேபி - சங்பரிவார்க் கும்பல்!

உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு இப்பொழுது அறிக்கையைக் கொடுத்துள்ளது அல்லவா - அதன் நிலை என்ன தெரியுமா? அட்வகேட் ஜெனரல் அந்த அறிக்கையின் முக்கிய அம்சத்தைக் குற்றவாளிகளுக்குக் கசிய விட்டார் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எசுக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கும் அந்த ரகசிய அறிக்கை வந்து சேர்ந்ததாக என்.டி.டி.வி. போன்ற தொலைக்காட்சிகளிலேயே செய்தியாக வெளிவந்து விட்டது.

இன்னும் என்னதான் செய்ய மாட்டார்கள்? சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற ராமனின் பெயரால் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கத் துடிப்ப வர்கள் ஆயிற்றே!

குஜராத் கலவர வழக்கில் மோடியும், மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும் தண்டிக்கப்படாவிட்டால் நாட்டில் நீதிக்கும், சட்டத்துக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி! உறுதி!!